1,021 அரசு டாக்டர்கள் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை -ஐகோர்ட்டு உத்தரவு


1,021 அரசு டாக்டர்கள் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை -ஐகோர்ட்டு உத்தரவு
x

கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு சலுகை வழங்கவில்லை என்ற முறையீட்டால், 1,021 அரசு டாக்டர்கள் பணிகளுக்கு நியமன உத்தரவு வழங்க இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. அப்போது, கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட மருத்துவத்துறையை சேர்ந்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதில், கொரோனா சிகிச்சை பணியில் 6 மாதம் வேலை செய்தால் 5 ஊக்க மதிப்பெண் என்ற வீதத்தில், போட்டித் தேர்வில் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,021 அரசு டாக்டர்கள் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.

சலுகை இல்லை

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ஆதம்ஸ் புஷ்பராஜ் உள்பட 14 டாக்டர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.தங்கசிவன் ஆஜராகி, "6 மாதம் பணியாற்றினால் 5 மதிப்பெண் வீதம் ஊக்க மதிப்பெண்கள் வழங்க மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின்படி, பிற மாநிலங்களில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இதுபோல திட்டத்தை உருவாக்கவில்லை.

மனுதாரர்கள் சுமார் 300 நாட்கள் வரை கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றியுள்ளனர். ஆனால், 1,021 டாக்டர் பணியிடங்களுக்கு தேர்வு குறித்து வெளியான அறிவிப்பில் எந்த சலுகையும் வழங்கவில்லை'' என்று வாதிட்டார்.

இடைக்கால தடை

இதையடுத்து நீதிபதி என்.சதீஷ்குமார், இந்த மனுவுக்கு தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர், மருத்துவ கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு எந்த ஒரு திட்டத்தையும் உருவாக்கவில்லை.

தற்போது, 1,021 அரசு டாக்டர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி, தேர்வின் முடிவும் வெளியிடப்பட்டு விட்டது. எனவே, இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க இடைக்கால தடை விதிக்கிறேன். விசாரணையை ஆகஸ்டு 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டு உள்ளார்.


Next Story