அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரிகளை ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்ததற்கு இடைக்காலத்தடை


அண்ணாமலை பல்கலைக்கழக அதிகாரிகளை ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்ததற்கு இடைக்காலத்தடை
x

அண்ணாமலை பல்கலைக்கழக சிறப்பு அதிகாரிகளை ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்ததற்கு இடைக்காலத்தடை ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உள்பட 115 பேர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த 202 கல்வி மையங்களை நிர்வகிக்க, சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

நிர்வாகப்பிரச்சினை காரணமாக பல்கலைக்கழகத்தை அரசே எடுத்தது. இதன்பின்பு கல்வி மையங்களின் எண்ணிக்கை 59 ஆக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக சிறப்பு அதிகாரிகள் பலர் உபரி அதிகாரிகளாக அறிவிக்கப்பட்டனர். பலரை உதவிப்பிரிவு அதிகாரியாக பதவி இறக்கம் செய்தும், ஊதியத்தை குறைத்தும் பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்பின்பு வேளாண்துறைக்கும், கல்லூரிக்கல்வி துறைக்கும் அயல் பணியாக மாற்றி அரசு உத்தரவிட்டது.

இதேபோன்று 350 சிறப்பு அதிகாரிகளை, அரசுக்கல்லூரிகளில் ஆய்வக உதவியாளர்களாக நியமித்து ஊதியத்தை குறைத்தனர். ஆய்வக உதவியாளர்களாக நியமித்த அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், 'முதுகலைப்பட்டம் பெற்ற மனுதாரர்களை, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கும் ஆய்வக உதவியாளர்களாக நியமித்தது சட்டவிரோதமானது. ஏற்கனவே பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்துள்ளது' என வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதி, 'மனுதாரர்களை ஆய்வக உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்த உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு தொடர்பாக தமிழக அரசு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.


Next Story