பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா


பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா, அடுத்த மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா, அடுத்த மாதம் 12-ந் தேதி தொடங்குகிறது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

பொள்ளாச்சியில் ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பலூன் திருவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் அடுத்த மாதம்(ஜனவரி) 12-ந் தேதி தொடங்கி, 15-ந் தேதி வரை சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் பலூன் திருவிழா நடைபெறும் இடத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி, சப்-கலெக்டர் பிரியங்கா, மண்டல மேலாளர் வெங்கடேசன், உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி, உதவி செயற்பொறியாளர் குணசேகரன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஆய்வுக்கு பிறகு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:-

பலூன் திருவிழா

தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை மூலம் பொள்ளாச்சியில் முதல் முறையாக சர்வதேச பலூன் திருவிழா அடுத்த மாதம் 12-ந் தேதி தொடங்கி, 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. மெக்சிகோவில் நடந்த பலூன் திருவிழாவில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறையின் பலூனும் கலந்துகொண்டது. பொள்ளாச்சியில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பலூன் திருவிழா நடத்தப்படவில்லை. அடுத்த மாதம் நடக்கும் பலூன் திருவிழாவில் நெதர்லாந்து, வியட்நாம், ஸ்பெயின், அமெரிக்கா உள்பட 8 நாடுகளில் இருந்து பலூன்கள் கொண்டு வரப்படுகின்றன.

பலூன் திருவிழாவில் இசை நிகழ்ச்சி, குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இந்த விழாவிற்கு மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கூடுதலாக நிதி ஒதுக்கி சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படுகிறது. இதேபோன்று பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் ஆய்வு செய்து சாத்திய கூறுகள் இருந்தால் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலாதலங்கள் மேம்பாடு

முன்னதாக கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் புதுப்பிக்கப்பட்ட உணவகத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கோவையில் தனியாருக்கு இணையாக தமிழ்நாடு ஓட்டல் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாவளர்ச்சித்துறை நடத்தும் சென்னை தீவுத்திடலில் உள்ள ரெஸ்டாரன்ட், கன்னியாகுமரி, நெல்லை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஓட்டல்கள் புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வருகை அதிகரிப்பதோடு, வருவாயும் அதிகரிக்கும். தமிழ்நாடு ஓட்டலில் உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதுப்புது உணவுவகைகளை அறிமுகப்படுத்துவதோடு, அதிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். தனியாருக்கு இணையாகவும் போட்டியாகவும் தரமான உணவுகளை வழங்கி வருகிறோம்.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இயக்கப்படும், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள அறகைள் அனைத்துமே பட்ஜெட் விலையில் உள்ளது என்றார்.

இதில் கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story