தான்சானியாவின் சான்சிபார் தீவில் சர்வதேச வளாகம்: சென்னை ஐ.ஐ.டி. வரலாறு படைக்கிறது


தான்சானியாவின் சான்சிபார் தீவில் சர்வதேச வளாகம்: சென்னை ஐ.ஐ.டி. வரலாறு படைக்கிறது
x

தான்சானியாவின் சான்சிபார் தீவில் சர்வதேச வளாகத்தை தொடங்கி சென்னை ஐ.ஐ.டி. சாதனை படைக்க உள்ளது.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. தான்சானியாவில் உள்ள சான்சிபார் தீவில் சர்வதேச வளாகத்தை தொடங்குகிறது. 4 ஆண்டு பி.எஸ். (தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு), 2 ஆண்டு முதுகலை மற்றும் தொழில்நுட்பம் (தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு) என்ற 2 முழுநேர கல்வி திட்டங்களை சான்சிபார் வளாகம் தொடக்கத்தில் வழங்கும். இதில் மொத்தம் 70 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதன்மூலம் சர்வதேச வளாகத்தை தொடங்கும் நாட்டின் முதல் ஐ.ஐ.டி. என்ற பெருமையை சென்னை ஐ.ஐ.டி. பெற்றுள்ளது.

சர்வதேச வளாகத்துக்காக சான்சிபார் தீவில் 200 ஏக்கர் பரப்பளவில் நிரந்தர வளாகம் அமைக்கப்பட உள்ளது. இந்த வளாகம் அமைய இருப்பதையொட்டி இறுதிகட்ட நடைமுறையாக இந்தியா-தான்சானியா இடையே அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா-தான்சானியா இடையேயான இந்த கல்வி கூட்டு முயற்சி, தனித்துவம் உடையதாகவும், கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும்.

அக்டோபர் முதல் வகுப்புகள்

சான்சிபார் வளாகத்தில் தொடக்க நாட்களில் சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்தோ அல்லது இந்தியாவை சேர்ந்தவர்களோ ஆசிரியர்களாக பணி அமர்த்தப்படுவார்கள். இதேபோன்று, உள்ளூரை சேர்ந்த திறமையான நபர்களுக்கு பயிற்சி அளித்து நியமிப்பதற்கான பணிகளும் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

சென்னையில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.யில் இந்த மாதத்தில் தொடங்க உள்ள பல்வேறு பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் தான்சானியாவை சேர்ந்த குடிமக்களுக்கு இந்திய அரசு ஏராளமான உதவித்தொகைகளை வழங்குகிறது. வருகிற அக்டோபர் மாதம் முதல் வகுப்புகளை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மைல் கல்

இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி கூறும்போது, சான்சிபாரில் வளாகத்தை நிறுவியிருப்பது உண்மையிலேயே சென்னை ஐ.ஐ.டி.யின் வரலாற்றில் மிகப்பெரிய மைல் கல்லாகும். இதன்மூலம் சான்சிபாரில் வருங்காலத்தில் உயர்கல்விக்கான முன்முயற்சிகளில் தீவிரமாக பங்கேற்க முடியும் என்றார்.

சான்சிபார் வளாகத்தின் பொறுப்பு இயக்குனராக அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் பள்ளியின் டீன் பேராசிரியர் ப்ரீத்தி அகலாயம் நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story