சர்வதேச யோகா தினம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது
சர்வதேச யோகா தினத்தையொட்டி மயிலாடுதுறை பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு ஓ.பி.சி.அணியின் மாவட்ட தலைவர் மோடி கண்ணன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். கின்னஸ் சாதனை படைத்த தாராஅஹ்ரா, ஜஷ்வந்திக்கா ஆகிய 2 சிறுமிகள் மூச்சு பயிற்சி, நாடிசுத்தி, சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனம் செய்து அனைவரையும் அசத்தினர். இதேபோல, மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் செய்த யோகா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அதனைத்தொடர்ந்து தரங்கம்பாடி சாலையில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் பா.ஜனதாவினர் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் யோகாசனம் செய்து அசத்தினர். இதில் அரசு தொடர்பு மாநில செயலாளர் கோவி.சேதுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, பாரதீய ஜனதா மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் தங்ககுணசேகரன் மற்றும் ஒன்றிய தலைவர் தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலையிலும் மயிலாடுதுறை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மணல்மேட்டில் பாரதீய ஜனதா சட்சியினர் மற்றும் பலர் யோகாசனம் செய்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விவசாய அணி தலைவர் குஜேந்திரன் கலந்து கொண்டார். மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ தலைமையில் முதன்மை சார்பு நீதிபதி கவிதா, அரசு வக்கீல் ராம.சேயோன் ஆகியோர் முன்னிலையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.