சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
திருச்சி, ஜூன்.22-
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
முதன்மை நீதிபதி
கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஜூன் மாதம் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிமன்றமும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் இணைந்து நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான பாபு தலைமை தாங்கினார். இதில் அனைத்து மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், உரிமையியல், குற்றவியில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதியுமான (பொறுப்பு) சோமசுந்தரம் செய்திருந்தார்.
ரெயில்வே கோட்ட மேலாளர்
இதேபோல் திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானத்தில் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால் தலைமையில் யோகா ஆசிரியர் செல்வம் வழிகாட்டுதலின்படி திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ரெயில்வே தொழிலாளர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் கலந்து கொண்டனர்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கான யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் மற்றும் பெற்றோர் உள்பட 350-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் அகிலா தலைமை தாங்கினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
திருச்சியில் யோகா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ராமலிங்கநகரில் தொடங்கி திருச்சி கோர்ட்டு ரவுண்டானா வரை சென்று மீண்டும் ராமலிங்கநகரை வந்தடைந்தது. ஊர்வலத்தை மாநகராட்சி உதவி ஆணையர் செல்வபாலாஜி, தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பூங்கொடி தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முசிறி
முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், காலை 6 மணி முதல் 8 வரை தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், முசிறி அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தா.பேட்டைஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேசிய மாணவர் படை மாணவர்கள் உட்பட 250 பேர் பயிற்சி பெற்றனர்.
திருவெறும்பூர்
திருவெறும்பூர் பெல் நிறுவனத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், நேரு விளையாட்டு மைதானத்தில் யோகாசனம் செய்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
உப்பிலியபுரம்
*உப்பிலியபுரம் ஒன்றியம் வெங்கடாசலபுரத்திலுள்ள அரசு மான்ய நடுநிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சியளிக்கப் பட்டது. தாடாசனம், கோணாசனம், திரிகோணாசனம், விபரீதகரணி, அர்த்தசிரசாசனம், ஏகபாதாசனம், சுகாசனம், வஜ்ராசனம், பம்மாசனம் முதலான ஆசனங்களை யோகா ஆசிரியை ரேணுகா மாணவ-மாணவிகளுக்கு பயிற்றுவித்தார்.
மண்ணச்சநல்லூர்
மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் யோகா தினத்தையொட்டி 50 தேசிய படை மாணவர்கள் பங்கேற்று பல்வேறு யோகா பயிற்சியினை செய்தனர்.