இன்டர்நெட் மூலம் தோழிகளை விலை பேசிய கல்லூரி மாணவி
இன்டர்நெட் வசதியால் உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் உள்ளங்களும் சுருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. எங்கேயோ நெடுந்தொலைவில் இருப்பவர்களை நெருங்கிக்கொண்டிருக்கும் நாம் அருகில் இருப்பவர்களுக்கு அந்நியமாகிப் போகிறோம்.
விஞ்ஞான வளர்ச்சி
ஒருவரிடம் 'ஸ்மார்ட் போன்' இல்லை என்பது இன்றைய நிலையில் மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளைஞிகளிடையே 'ஸ்மார்ட் போன்' பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. ஆனால் இந்த போன்களை பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொள்பவர்கள் மிக சொற்ப அளவிலேயே உள்ளனர். ஆக்க சக்தியாக பயன்படுத்தப்பட வேண்டிய விஞ்ஞான வளர்ச்சியை அழிவு சக்தியாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் 'இன்டர்நெட்' மூலம் சக கல்லூரி மாணவிகளையே பாலியல் பேரம் பேசிய அவலம் அரங்கேறியுள்ளது.
எல்லோரிடமும் நட்பாக பழகக் கூடிய நல்ல பெண் என்பதே கல்லூரியில் அந்த பெண்ணின் அடையாளமாக இருந்தது. எல்லோரிடமும் வலிய சென்று பழகும் அந்த மாணவி அவர்களிடம் செல்போன் எண்களைப் பரிமாறிக் கொள்வது சாதாரணமாக நடக்கும் தினசரி நிகழ்வாக இருந்தது.
ஆண் நண்பர்கள்
இந்த நிலையில் தான் அந்த அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்தது. அந்த கல்லூரியின் சீனியர் மாணவிகள் இருவரின் புகைப்படத்துடன், அவர்களுக்கு ஒரு விலை வைத்து 'இன்டர்நெட்' மூலம் பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தகவல் கிடைத்து அதிர்ந்தனர். அந்த சீனியர் மாணவிகளின் புகாரின் பேரில் கல்லூரி நிர்வாகம் விசாரணையை தொடங்கியது. அப்போதுதான் வலிய சென்று தோழியான ஜூனியர் மாணவியின் வேலை அது என்பது தெரிய வந்தது. அந்த மாணவிக்கு பல ஆண் நண்பர்கள் இருந்துள்ளனர். பல மாணவிகளிடம் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்ட அந்த மாணவி அவர்களின் 'ஸ்டேட்டசில்' வைக்கும் புகைப்படங்களை எடுத்து ஆண் நண்பர்களுக்கு அனுப்பி அந்த பெண்களை விலை பேசியுள்ளார்.
ஒருசில ஆண்களிடம் பணமும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த பெண்ணிடமிருந்து 'ஸ்மார்ட் போனை' கைப்பற்றி ஆய்வு செய்தபோது நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களை சேமித்து வைத்திருப்பது தெரிய வந்தது. சக தோழிகளுக்கே தெரியாமல் அவர்களின் புகைப்படங்களை எடுத்து அதனை ஆண் நண்பர்களுக்கு அனுப்பி பணம் பார்க்கும் கேவலமான வேலையை அந்த மாணவி செய்துள்ளார். உடனடியாக கல்லூரி நிர்வாகம் அந்த பெண்ணை கல்லூரியை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பி விட்டது.அத்துடன் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டதாக நிர்வாகம் நம்புகிறது. ஆனால் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஆண்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? இதுவரை இந்த மாணவியால் அனுப்பப்பட்ட சக மாணவிகளின் புகைப்படங்கள் அவர்களிடம் உள்ளதா? அதனை அவர்கள் எப்படி பயன்படுத்தப் போகிறார்கள்? இந்த வலையில் தங்களுக்கே தெரியாமல் சிக்கியிருக்கும் மாணவிகளின் கதி என்ன? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் நம் முன் இருக்கிறது.
நிச்சயமாக சக தோழிகளையே விலை பேசிய அந்த மாணவி குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட வேண்டியது அவசியமாகும். சைபர் கிரைம் போலீசார் அந்த மாணவியின் 'ஸ்மார்ட் போனை' கைப்பற்றி முழுமையான ஆய்வு செய்ய வேண்டியதும் அவசியமாகிறது. உல்லாச வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்பட்டு தடம் மாறும் ஒருசில பெண்கள் குறித்து அன்றாடம் செய்திகளில் படிக்கிறோம். அவர்களை தடம் மாற்றுவதில் 'ஸ்மார்ட் போன்'களின் பங்கு பெருமளவு உள்ளது. மேலும் வித விதமாக ஆடை அலங்காரங்களுடன் 'வாட்ஸ்-ஆப்' ஸ்டேட்டஸ் வைப்பது பல பெண்களுக்கு வழக்கமாக உள்ளது. அந்த படங்கள் இதுபோன்ற ஒரு சில விஷமிகளால் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இன்டர்நெட் என்பது கூர்மையான கத்தியைப் போன்றதாகும். அது நமது பாதுகாப்புக்குப் பயன்படும். அதேநேரத்தில் பாதிப்பு ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.