பா.ஜனதாவில் இணைய திட்டமா?- முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பரபரப்பு பேட்டி
தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். இவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார்.
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் இவருக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட சீட் கொடுக்கவில்லை.
இதையடுத்து சுயேட்சையாக போட்டியிட்டு கணிசமான ஓட்டுகளை பெற்றார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் இணைந்தார். மேலும் பெருந்துறை பகுதியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார்.
தி.மு.க.வில் இணைந்தும் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. இதையடுத்து கடந்த சில நாட்களாகவே அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
மேலும் அவர் தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைய போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- தற்போது வரை நான் தி.மு.க.வில் தான் இருந்து வருகிறேன். கடந்த சில நாட்களாக வேண்டும் என்றே சிலர் நான் பா.ஜனதாவில் இணைய போகிறேன் என்று தகவல் பரப்பி வருகின்றனர். நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது எனது தொகுதிக்காக அத்திக்கடவு-அவினாசி திட்டம், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை கேட்டுப்பெற்றேன்.
இதில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டம் தி.மு.க. அரசின் ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. மேலும் மாவட்ட அமைச்சரும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தோப்பு வெங்கடாச்சலம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நாளை நான் பா.ஜனதாவில் இணைய போவதாக செய்தி வந்துள்ளதாக சிலர் என்னிடம் தெரிவித்தார்கள். இது உண்மைக்கு மாறானது. நான் தற்போது வரை தி.மு.க.வில் தான் இருந்து வருகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.