வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த தமிழக மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை


வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த தமிழக மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை
x

வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த தமிழக மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் அனுமதி வழங்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு, ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை சேர்ந்த வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த மாணவர்கள் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியா திரும்பினர். இங்கிருந்தே ஆன்-லைன் மூலமாக படிப்பை முடித்தனர். பிறகு தேசிய மருத்துவ கவுன்சில் நடத்திய வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி என்ற கடினமாக தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் மீண்டும் படிப்பை தொடர சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு செல்ல முடியவில்லை என கூறுகின்றனர்.

ஆன்-லைன் வகுப்பு காரணமாக, தேசிய மருத்துவ கவுன்சில் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஒரு வருடத்துக்கு பதிலாக 2 வருடங்கள் சி.பி.ஆர்.ஐ. எனப்படும் 'இன்டர்ன்ஷிப்' செய்ய வேண்டும்.

இதன்படி ஒவ்வொரு மாநில மருத்துவக் கவுன்சிலும் விதியை பின்பற்றுவதால், அந்தந்த மாநிலங்களில் 2 வருடங்களாக மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஆனால், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், தமிழ்நாட்டின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி மாணவர்களை தமிழகத்தில் இன்டர்ன்ஷிப் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் மருத்துவ மாணவர்கள் படிப்பில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதாவது தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப்க்காக ஒரு வருடத்திற்கும் மேலாக சுமார் 600-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அனுமதி தர முன்வர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். எனவே மத்திய-மாநில அரசுகள், வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்த தமிழக மருத்துவ மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்க்கு அனுமதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story