போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி சாவு: 5 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. குற்றப்பத்திரிகை தாக்கல்
கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி இறந்தது தொடர்பாக 5 போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அம்பை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் முருகன். இவரை கடந்த 2015-ம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கல்லிடைக்குறிச்சி போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முருகன் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக அப்போதைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்கள் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று அம்பை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதாவது அப்போதைய கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கனகராஜ் (தற்போது ராமநாதபுரம் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர்), சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றுகிறார்), விருப்ப ஓய்வில் சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், அடைக்கல அந்தோணி ஜேக்கப் மற்றும் தலைமை காவலர் மாரி (தற்போது திருப்பூர் போலீஸ் நிலையத்தில் உள்ளார்) ஆகிய 5 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து 5 போலீசாரும் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வருகிற ஜூன் மாதம் 5-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று அம்பை குற்றவியல் நடுவர் பல்கலைச்செல்வன் உத்தரவிட்டார்.