கர்நாடகாவில் பிரிவினைவாத அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
கர்நாடகாவில் பிரிவினைவாத அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
மானாமதுரை
கர்நாடகாவில் பிரிவினைவாத அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் விற்பனை
மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததில் 22 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒரே நாளில் 1,500 பேரை கைது செய்ததாக கூறுவது காவல்துறைக்கு தெரியாமலா நடந்திருக்கும். கள்ளச்சாராயம் விற்பனை என்பது அதிகார வர்க்கத்திற்கு தெரியாமல் நடப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் இச்சம்பவத்தில் உயிரிழந்த குடுபத்திற்கு தலா ரூ.10 லட்சம் முதல்-அமைச்சர் மனிதாபிமான அடிப்படையில் நிதி உதவி வழங்கியதில் தவறு இல்லை. தேசியவாதிகள் தோற்றால் பிரிவினை சித்தாந்தம் கொண்டவர்கள் மகிழ்ச்சி அடைவது இயல்பு.
பா.ஜ.க. ஊழல் ஆட்சி
பா.ஜ.க.வினர் வெற்றி பெற்றால் தேசியம் வெற்றி பெற்றது என்றும், அவர்கள் தோற்றால் பிரிவினைவாதம் ஜெயித்தது என்று கூறுவது அவர்களின் வழக்கம். கர்நாடகாவில் ஏற்கனவே நடைபெற்று வந்த பா.ஜ.க. ஊழல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும், பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்த அம்மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மையான மெஜாரிட்டியை கொடுத்து அமோக வெற்றி பெற வைத்துள்ளனர். இதை பா.ஜ.க.வினர் ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சஞ்சய்காந்தி, மாவட்ட இணைச்செயலாளர் பாண்டிவேல், வக்கீல் முத்துக்குமார், நகராட்சி கவுன்சிலர் புருஷோத்தமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்நல்லதுரை ஆகியோர் உடனிருந்தனர்.