நியாய விலைக்கடைகளில் காலி பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு
நியாய விலைக்கடைகளில் காலி பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு 12-ந்தேதி தொடங்குகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. http://drbtvmalai.net என்ற இணையதளம் வழி விற்பனையாளர் பணியிடத்திற்கு 20 ஆயிரத்து 29 விண்ணப்பங்களும், கட்டுநர் பணியிடத்திற்கு 2 ஆயிரத்து 593 விண்ணப்பங்களும் என மொத்தம் 22 ஆயிரத்து 622 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதில், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வானது விற்பனையாளர் பணியிடத்திற்கு வருகிற 12-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலும், கட்டுநர் பணியிடத்திற்கு 29 மற்றும் 30-ந்தேதிகளில் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
நேர்முக தேர்வுக்கான நுழைவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தியாகவுமம் (SMS), மின்னஞ்சல் (e-Mail) வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் http://drbtvmalai.net என்ற இணைய தளத்தில் இருந்தும் தங்களது நேர்முக தேர்வுக்கான நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முக தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆவண ஆதாரங்களுடன் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உரிய நாள் மற்றும் நேரத்தில் மட்டுமே நேர்முக தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்களின் கல்வி மற்றும் இதர தகுதிகளை சரிபார்த்து தகுதி அடிப்படையில் நேர்முக தேர்வில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். நேர்முக தேர்வுக்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய ஏற்படும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இ-மெயில் மூலம் திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மின்னஞ்சல் முகவரியில் அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் உதவி மையம் தொடர்பு தொலைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவரும், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருமான நடராஜன் தெரிவித்துள்ளார்.