நடிகர் ஆர்யா பேட்டி
‘‘அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’’- நெல்லையில் நடிகர் ஆர்யா பேட்டி
நடிகர் ஆர்யா நடித்த 'கேப்டன்' திரைப்படம் வருகிற 8-ந்தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நடிகர் ஆர்யா சென்று, கேப்டன் திரைப்படத்தின் டிரைலரை ரசிகர்களுடன் பார்வையிட்டு வருகிறார். அதன்படி நெல்லை ராம் தியேட்டரில் நேற்று கோப்ரா திரைப்படத்தின் இடைவேளையின்போது திரையிடப்பட்ட கேப்டன் படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா ரசிகர்களுடன் பார்த்தார்.
அப்போது அவர் கூறுகையில், கேப்டன் திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக நடிகர் ஆர்யா நிருபர்களிடம் கூறுகையில், ''கேப்டன் திரைப்படம் ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் போன்று கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் பல காட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆங்கில படத்திற்கு இணையாக இந்த படம் தயாராகி உள்ளது. காடுகளிலும் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். தமிழகத்தில் திரைத்துறை பாதுகாப்பான நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் திரையரங்குகளில் குறைவான காட்சிகள் திரையிடப்பட்டன. தற்போது அதிக காட்சிகள் திரையிடப்படுவதால், 100 நாட்களில் கிடைக்கும் வருமானம் 2 நாட்களிலேயே கிடைத்து விடுகிறது. அரசியல் களத்தில் இறங்கும் அளவுக்கு எனக்கு மூளை இல்லை. அந்த எண்ணமும் இல்லை'' என்றார்.
முன்னதாக நடிகர் ஆர்யாவுக்கு ராம் சினிமாஸ் உரிமையாளர் ராமசாமி ராஜா தலைமையில் பொன்னாடை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி வினியோகஸ்தர் பிரதாப் ராஜா, மூகாம்பிகை பிலிம்ஸ் மணி, முத்துராஜ் கிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.