அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறினார்.
சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் கணிக்கர் சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் 7 மாணவ, மாணவிகளுக்கு சாதி சான்றிதழை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். அப்போது மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனாமணி, தாசில்தார் கார்த்தி, மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை சோழராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பேட்டி
பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
டெல்டா பகுதியில் விவசாயம் சார்ந்த தொழில்பேட்டை நிச்சயமாக அமையும். அதற்கான இடம் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும். தமிழகமே கொண்டாடப்பட வேண்டிய திட்டம் நான் முதல்வர் திட்டம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கணிக்கர் சமுதாயத்திற்கு சாதி சான்று வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் அறிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்த உடனே சிலமாதங்களில் பல்வேறு மாவட்டங்களில் கணிக்கர் சமுதாயத்திற்கு சாதி சான்று வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மன்னார்குடியில் நேற்று கனிக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சாதி சான்று வழங்கப்பட்டது.
இ பஸ் கொண்டு வர நடவடிக்கை
மகளிர் உரிமை தொகை திட்டம் அனைவருக்கும் சேர வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் நோக்கம். அந்த அடிப்படையில் ஒரே குடும்பத்தில் 2 நபர்களுக்கு அரசு திட்டம் கிடைத்தால் மகளிர் உரிமை தொகை திட்டம் கிடைக்காத நபர்களுக்கு கிடைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. மகளிர் உரிமை தொகை திட்டம் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிரீன் டெக்னாலஜி பசுமை திட்டத்தின் கீழ் இ பஸ் தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்போது திருவாரூர் மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என அமைச்சரிடம் தெரிவித்தேன். முதலில் சென்னைக்கு கொண்டு வந்த பிறகு தான் பிற மாவட்டங்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறினார்.
முதல் மாநிலம் தமிழகம்
மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முதல் மாநிலமாக செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களின் வரி பணத்தை முறையாக செயல்படுத்தும் விதமாக இளைஞர்கள் மற்றும் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இளைஞர்கள் பயன்படும் வகையான திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும். அதன் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.