முதல்-அமைச்சர் கோப்பைக்கான இறுதிப்போட்டி சென்னையில் நடத்தப்படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
முதல்-அமைச்சர் கோப்பைக்கான இறுதிப்போட்டி சென்னையில் நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற கூட்டத்தில் விளையாட்டுத்துறை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் வைக்க உள்ளோம். ரூ.25 கோடி செலவில் தமிழகத்தில் முதல் முறையாக முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி உள்ளோம்.
விரைவில் இறுதிப்போட்டி சென்னையில் நடத்தப்பட உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளார். தஞ்சை செங்கிப்பட்டி அருகே ஸ்போர்ட்ஸ் சிட்டி கொண்டுவருவது தொடர்பான விவரங்களை விரைவில் தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மாலையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் நேர்காணல் நடத்தினார்.
----