கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு துரதிருஷ்டவசமானது


கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு துரதிருஷ்டவசமானது
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:45 PM GMT)

கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு துரதிருஷ்டவசமானது என்று மதுரையில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

மதுரை


கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு துரதிருஷ்டவசமானது என்று மதுரையில் புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

மீனாட்சி கோவிலில் தரிசனம்

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்-அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் ஆட்சி செய்த பா.ஜ.க. அரசு ஊழல்களை செய்தது. இதனை மக்களிடம் எடுத்துக்கூறியதால் காங்கிரஸ் கட்சி தற்போது அங்கு ஆட்சிக்கு வந்துள்ளது.

கர்நாடக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக நிறைவேற்றும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். கள்ளச்சாராயம் தொடர்பாக நடந்த உயிரிழப்பு துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

அண்ணாமலை வற்புறுத்துவாரா?

மரக்காணத்தில் பயன்படுத்திய கள்ளச்சாராயம் புதுச்சேரியில் இருந்துதான் வந்துள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடியிருப்புகள், பள்ளி அருகில் மதுக்கடைகள் திறப்பதால் புதுச்சேரி மக்கள் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு முதல்-அமைச்சர் ரெங்கசாமிதான் காரணம்.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பா.ஜனதா இரட்டை வேடம் போடுகிறது. திராணி இருந்தால் கள்ளச்சாராய விவகாரத்தில் புதுச்சேரி முதல்-அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லி அண்ணாமலை வற்புறுத்துவாரா?.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாநில பொதுச்செயலாளர் சையது பாபு, மகளிர் அணி மாநகர் தலைவர் ஷானவாஸ் பேகம், மாநகர் மாவட்ட துணை தலைவர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story