தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவர்கள் மீது நடவடிக்கை மாநில ஆணையர் பிரதாப்குமார் பேட்டி
தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் கூறினார்.
சேலம்,
அபராதம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தலைமையில் தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்றது. முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாடு தகவல் ஆணையம் மூலம் சேலம் மாவட்டத்தில் இன்று (நேற்று) 60 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இந்த விசாரணையில் பல்வேறு துறைகளில் இருந்து பொது தகவல் அலுவலர்கள் பங்குபெற்று அவர்களுடைய 2-ம் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைக்கப்படுகிறது. இதில் 2 வழக்குகளில் தகவல் வழங்காத வருவாய்த்துறையை சேர்ந்த பொது தகவல் அலுவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பராமரிக்க வேண்டும்
ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறையில் அதிகளவு புகார்கள் வருகின்றன. அனைத்துத்துறைகளில் இருந்தும் தினமும் 300 முதல் 500 மனுக்கள் வரை 2-ம் மேல்முறையீடுக்கு பெறப்படுகின்றன. தமிழகம் முழுவதும் ஆயிரம் மனுக்கள் விசாரித்தால் அதில் 20 முதல் 30 சதவீதம் வரை பொது தகவல் அலுவலருக்கு அபராதம் விதித்து வருகின்றோம்.
சிலர் சுதந்திரத்துக்கு முந்தைய காலங்களுக்கான ஆவணங்களை கேட்கின்றனர். மனுதாரர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக அனைத்து ஆவணங்களும் டிஜிட்டல் முறையில் பராமரிக்க வேண்டும் என்று அரசுக்கு பலமுறை பரிந்துரை செய்துள்ளோம்.
நடவடிக்கை
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உள்ள 2 அல்லது 3 சட்டப்பிரிவுகள் தெரிந்திருந்தாலே சரியான கேள்விகளை கேட்டு மனுதாரர்கள் பதில் பெறலாம். ஆனால் ஒரே மனுதாரர் பல்வேறு துறைகளில் இருந்து 100 கேள்விகளை கேட்கின்றனர். இதனால் அவர்களுக்கு சரியான பதில் கொடுக்க முடியவில்லை.
சில மாவட்டங்களில் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் அலுவலகம் அமைத்து கொண்டு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதுடன் எங்களுடைய நேரத்தையும் வீணடிக்கின்றனர். மாநில அளவில் மற்றும் மாவட்டம், தாலுகா அளவில் நிரந்தரமான பொது தகவல் அலுவலர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்காணிக்க வேண்டும்
பஞ்சமி நிலம் என்று தெரிந்து கொண்டு அதை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்பவர்களை கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கும், மாவட்ட கலெக்டருக்கும் பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) ஜெகநாதன், கீதா பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.