5 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துகேட்டு முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதியை ரத்து செய்ய வேண்டும்: குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
5 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துகேட்டு, முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதியை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
விவசாயிகள் பேசும்போது கூறியதாவது:-
ஆண்டிப்பட்டி பகுதிகளின் வறட்சியை போக்குவதற்கு முல்லைப்பெரியாறு தண்ணீரை கொண்டு அங்குள்ள குளங்களில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். பழங்குடியினர் மக்கள் வாழும் மலைக்கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியைகள் சரியாக வருவது இல்லை. கல்வித்துறை அதிகாரிகளும் இங்கு ஆய்வு செய்வதில்லை. எனவே மலைக்கிராம பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்த வேண்டும்.
முல்லைப்பெரியாறு
கனிமவளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதனால் விவசாயிகள் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி பெற முடியவில்லை.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் உள்ளது. அந்த பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். அணையின் நீர்மட்டத்தை உயர்த்த இடையூறாக உள்ள ரூல்கர்வ் விதி குறித்து தேனி உள்பட 5 மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்டு, அந்த விதியை ரத்து செய்ய வேண்டும். பி.டி.ஆர்.-தந்தை பெரியார் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்.
பென்னிகுயிக் வாழ்ந்த வீடு
கூடலூரில் கர்னல் ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். அவர் பயன்படுத்திய பொருட்களை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார். மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனலட்சுமி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.