திருச்சி ரெயில்வே கோட்டத்தில் இந்த ஆண்டு வருவாய் அதிகரிப்பு-முதுநிலை வணிக மேலாளர் பேட்டி
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் கடந்தாண்டை காட்டிலும் இ்ந்த ஆண்டு வருவாய் அதிகரித்துள்ளது என்று ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் கூறினார்.
திருச்சி, ஜூன்.16-
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் கடந்தாண்டை காட்டிலும் இ்ந்த ஆண்டு வருவாய் அதிகரித்துள்ளது என்று ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார் கூறினார்.
இது தொடர்பாக நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நவீன கண்டுபிடிப்புகள்
ரெயில்வே மந்திரி ஸ்ரீஅஷ்வினி வைஷ்ணவ் கடந்த 13-ந் தேதி புதுடெல்லியில் ரெயில்வேக்கான ஸ்டார்ட்அப்ஸ் முயற்சிகள் பற்றி தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் ரெயில்வேயை நவீன கண்டுபிடிப்புகள் மூலம் மேம்படுத்த முடியும். நவீன கண்டுபிடிப்புகள் மூலம் ரெயில்வே துறையில் 100 வகையான செயல்பாடுகளை மேம்படுத்தலாம் என ஆராயப்பட்டுள்ளது. அவற்றில் முதல் கட்டமாக 11 வகையான செயல்பாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உடைந்த ரெயில் கண்டறிதல் அமைப்பு, தண்டவாளத்தில் உள்ள விரிசல்களை நவீன முறையில் கண்டறிதல், ரெயில்வே பாலம் ஆய்வுக்கு தொலை உணர்வு முறையை பயன்படுத்துதல், வேகன்களின் எடையை குறைத்து அதிக சரக்குகளை ஏற்றி செல்லுதல், தண்டவாளம் சுத்தம் செய்யும் எந்திரம், பாதை ஆய்வு நடவடிக்கைகளின் தானியங்கி அமைப்பு உள்பட 11 வகையான செயல்பாடுகளை புதிய நவீன கண்டுபிடிப்புகள் மூலம் மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வருவாய் அதிகரிப்பு
தொழில் முனைவோர்கள் தங்களது நவீன கண்டிபிடிப்புகள் மூலம் இதனை செயல்படுத்தலாம். 11 செயல்பாடுகளில் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.1 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ள விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் பயணிகள் ரெயில் சேவை மற்றும் சரக்கு ரெயில் சேவையில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ரூ.115 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ரூ.229 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இது கடந்தாண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
பயணிகள் ரெயில் சேவை மூலம் மட்டும் 2021-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வருவாய் ரூ.19 கோடியே 64 லட்சமாக இருந்தது. இந்த ஆண்டு அது ரூ.68 கோடியே 12 லட்சமாக உள்ளது. இது கடந்தாண்டை விட 3 மடங்கு அதிகமாகும்.
விழுப்புரம்-தஞ்சை
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில்வே கேட்டுகளிலும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆள் இல்லாத ரெயில்வே கேட் என்பதே இல்லாத நிலை தான் தற்போது உள்ளது. திருச்சி - விழுப்புரம் இரட்டை ரெயில் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டன. விழுப்புரம் - தஞ்சை, விழுப்புரம் - நாகை இரட்டை ரெயில் பாதை பணிகளை தொடங்க அனுமதி கோரியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது ரெயில்வே கோட்ட முதுநிலை மேலாளர் (இயக்கம்) ஹரிக்குமார், முதுநிலை பொறியாளர் திருமால் ஆகியோர் உடன் இருந்தனர்.