சர்க்கரை பொங்கல் என்றால், சர்க்கரை போட்டு வைப்பார்களா?


சர்க்கரை பொங்கல் என்றால், சர்க்கரை போட்டு வைப்பார்களா?
x

கரும்பு வழங்காதது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். சர்க்கரை பொங்கல் என்றால், சர்க்கரை போட்டு வைப்பார்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை

கரும்பு வழங்காதது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். சர்க்கரை பொங்கல் என்றால், சர்க்கரை போட்டு வைப்பார்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மதுரையில் கூறியதாவது:-

நடவடிக்கை

கடந்த 2021-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது ரூ.2500 நிதியுடன், அரிசி, சர்க்கரை, கிஸ்மிஸ், முந்திரி ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு என பொங்கல் பரிசு வழங்கினார். அத்துடன் வேட்டி சேலையும் வழங்கினார். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தும் தரமற்றவையாக இருந்தது. இதனால் மக்களும் கொதித்து போயினர். அதற்கு விளக்கம் அளித்த முதல்-அமைச்சர் ஸ்டாலின், தரமற்ற பொருட்கள் வழங்கிய ஒப்பந்ததார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. வருகிற பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும், கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.

ஆனால் பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.. பொங்கலுக்கு மிக தேவையான கரும்பு வழங்கப்படவில்லை. இது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். கரும்பு வழங்குவதால் தமிழக விவசாயிகள் அதிகளவில் பயன் அடைவார்கள். எனவே தமிழக அரசு விவசாயிகளிடம் கரும்புகளை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும். அதே போல் யானை பசிக்கு சோளப்பொறி என்பது போல ரூ.1000 நிதி என்பது போதாது.

சர்க்கரை பொங்கல்

அரசின் பொங்கல் தொகுப்பு அறிவிப்பு மக்களை ஏமாற்றுகிறது என்றால், அதற்கு அமைச்சர்கள் அளிக்கும் விளக்கங்கள் வேதனையாக உள்ளது. மதுரையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு கடந்த பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட வெல்லம், முந்திரி பருப்பு, கரும்பு குறித்து மக்கள் குறை சொன்னதால் அவை எல்லாம் இந்த பொங்கலுக்கு நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும் அவர், இது சர்க்கரை பொங்கல் என்பதால் சர்க்கரையும், அரிசியும் வழங்குவதாக கூறுகிறார். பொங்கலுக்கு வெல்லம் பயன்படுத்துவார்களா? சர்க்கரை பயன்படுத்துவார்களா என்று கூட ஒரு அமைச்சருக்கு தெரியாமல் இருக்கிறது. இவர் மக்கள் பிரச்சினைகளை எப்படி தீர்க்க போகிறார். அதுமட்டுமின்றி தரமான பொருட்களை வழங்க இந்த அரசுக்கு தகுதி இல்லை என்பது அமைச்சரின் பேச்சில் இருந்தே தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story