இளம்பெண்ணை திருமணம் செய்ய ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்


இளம்பெண்ணை திருமணம் செய்ய ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்
x
தினத்தந்தி 15 Aug 2023 12:30 AM IST (Updated: 15 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை திருமணம் செய்ய ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்

கோயம்புத்தூர்

காந்திபுரம்

கோவையில் தாலிகட்டாமல் ஒரு வருடம் குடும்பம் நடத்திவிட்டு இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய ஐ.டி. ஊழியர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தாலிகட்டாமல் குடும்பம் நடத்தினார்

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் பரத் (வயது 28), ஐ.டி. ஊழியர். இவருக்கும், உடன் வேலை செய்து வந்த 26 வயது பெண் ஊழியருக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

பின்னர் இருவரும் சேர்ந்து சிறிய ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்தனர். தொடர்ந்து 2 பேரும் கடந்த ஒரு வருடமாக தாலிகட்டாமல் கணவன்-மனைவி போல சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் செய்ய மறுப்பு

இதனால் அந்த இளம்பெண் 4 முறை கர்ப்பம் அடைந்து உள்ளார். அதை பரத் கூறியதன் பேரில் கருக்கலைப்பும் செய்து உள்ளார். அத்துடன் பரத், அந்த இளம்பெண்ணிடம் தொழிலை விரிவுபடுத்த பலமுறை பணமும் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே அந்த இளம்பெண் பரத்திடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உள்ளார். ஆனால் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. பலமுறை கேட்டும் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்

இதனால் அந்த இளம்பெண் பரத்தின் தாயார் சாந்தியை சந்தித்து பரத்தை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி உள்ளார். அதற்கு அவர் மறுத்து உள்ளார். தொடர்ந்து அவர் கூறி வந்ததால், சம்மதம் தெரிவித்தார்.

அத்துடன் 2 பேருக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும். அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் எனது மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்துவிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு பரத் மற்றும் உறவினர்களும் உடந்தையாக இருந்து உள்ளனர்.

5 பேர் மீது வழக்கு

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இது குறித்து கோவை மத்திய மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பரத், அவருடைய தாயார் சாந்தி, உறவினர்கள் அருண், ராணி, தினகரன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story