பெண்ணை திருமணம் செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டல்
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண்ணை திருமணம் செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டிய ஐ.டி. ஊழியர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண்ணை திருமணம் செய்ய கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டிய ஐ.டி. ஊழியர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நிச்சயதார்த்தம்
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த 28 வயதான ஐ.டி. பெண் ஊழியருக்கும், கோவை அருகே பட்டணம் பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியரான லோகேஷ் (வயது 28) என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்னை ஆவடியில் திருமண நிச்சயதார்த்தம்நடந்தது.
இதனால் அவர்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். இதையடுத்து சென்னை சென்ற லோகேஷ், ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி அங்கு வரும்படி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
கூடுதலாக வரதட்சணை
அந்த பெண் அந்த ஓட்டலுக்கு சென்றபோது வரவேற்பறையில் உள்ள ஆவணத்தில் 2 பேரும் கையெழுத்து போட்டு உள்ளனர். இதை அவருக்கு தெரியாமல் லோகேஷ் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சில நாட்கள் கழித்து லோகேசின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவர், அந்த பெண்ணிடம் பேசவில்லை என்று தெரிகிறது. மேலும் அவர், அந்த பெண்ணிடம் நான் உன்னை திருமணம் செய்ய வேண்டும் என்றால் ரூ.10 லட்சம், 100 பவுன் நகை கூடுதலாக தர வேண்டும். இல்லைஎன்றால் நீ ஓட்டலுக்கு வந்தபோது எடுத்த புகைப்படத்தை உனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு லோகேசின் தாயார் கோகிலவாணியும் (54) உடந்தையாக இருந்துள்ளார்.
2 பேர் மீது வழக்கு
இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பேரூர் மகளிர் போலீசார் லோகேஷ், அவருடைய தாயார் கோகிலவாணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.