சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயன்ற மீன்வள ஆய்வாளருக்கு மிரட்டல்


சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயன்ற மீன்வள ஆய்வாளருக்கு மிரட்டல்
x

சாமியார்பேட்டை அருகே நடுக்கடலில் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயன்ற மீன்வள ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

சிதம்பரம்,

கடலூர் மீன்வள ஆய்வாளர் சதுரூதின் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் சாமியார்பேட்டை கடற்கரையில் இருந்து சுமார் 9 நாட்டிக்கல் தொலைவில் நடுக்கடலில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவர்கள், யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கிறார்களா? என சோதனை செய்தனர். அந்த சமயத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி பெரிய விசைப்படகு ஒன்றில் 4 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த மீன்வள ஆய்வாளர் சதுரூதின், சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயன்றார்.

அப்போது விசைப்படகில் இருந்த கடலூர் முதுநகர் அடுத்த அக்கரைக்கோரியை சேர்ந்த மீனவர்கள் லோகு, பிரகாஷ், வினித், மயிலாடுதுறை மாவட்டம் வானகிரியை சேர்ந்த மணி ஆகியோர் சதுரூதினை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து, விசைப்படகை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சதுரூதின் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் லோகு உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story