தொழிலாளியை காரில் கடத்தி சென்று மிரட்டல்; 2 பேர் கைது


தொழிலாளியை காரில் கடத்தி சென்று மிரட்டல்; 2 பேர் கைது
x

வேலூரில் அண்ணன் வாங்கிய ரூ.85 லட்சத்தை திரும்ப கொடுக்காததால் அவரது தம்பியை காரில் கடத்தி சென்று வீட்டில் அடைத்து மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

வேலூரில் அண்ணன் வாங்கிய ரூ.85 லட்சத்தை திரும்ப கொடுக்காததால் அவரது தம்பியை காரில் கடத்தி சென்று வீட்டில் அடைத்து மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பங்கு சந்தையில் முதலீடு

வேலூர் அலமேலுமங்காபுரம் பேங்க்மேன் காலனி பகுதியை சேர்ந்தவர் சங்கர்லால். இவர் பங்குச்சந்தையில் பணம் முதலீடு செய்து வந்தார். மேலும் தனக்கு தெரிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பங்குச்சந்தையில் பணம் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி பைனான்ஸ் நடத்தி வரும் காட்பாடி காந்திநகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 45) மற்றும் தொரப்பாடி காமராஜர்நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி (63) ஆகியோர் சங்கர்லாலிடம் ரூ.85 லட்சம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்படி கொடுத்ததாக கூறப்படுகிறது.

சங்கர்லால் அந்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்தது குறித்தும், அதன் தற்போதைய மதிப்பு உள்ளிட்ட எந்த விவரங்களையும் 2 பேரிடமும் தெரிவிக்கவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த இருவரும் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி சங்கர்லாலிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் அதனை கொடுக்காமல் காலம் கடத்தி ஏமாற்றி வந்துள்ளார். இதற்கிடையே சங்கர்லால் வசித்து வந்த வீட்டை காலி செய்தாகவும், செல்போனில் தொடர்பு கொண்டபோதும் அவர் எடுத்து பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.

காரில் கடத்தல்

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி இரவு வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் வேலை செய்யும் சங்கர்லாலின் தம்பி சசிகுமார் நின்று கொண்டிருந்தார். இதையறிந்த செந்தில்குமார், சுந்தரமூர்த்தி இருவரும் அங்கு சென்று உன் அண்ணன் எங்களுக்கு தர வேண்டிய ரூ.85 லட்சத்தை நீதான் வாங்கித்தர வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிதுநேரத்தில் 2 பேரும் ஓல்டுவுன் பகுதியை சேர்ந்த நண்பர் பாஸ்கரின் உதவியுடன் சசிகுமாரை அங்கிருந்து காரில் கடத்தி சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். பின்னர் சங்கர்லாலை செல்போனில் தொடர்புகொண்டு உனது தம்பியை கடத்தி விட்டோம். எங்களின் பணத்தை உடனடியாக கொடுத்தால் தான் அவனை விடுவிப்போம் என்று மிரட்டி உள்ளனர்.

2 பேர் கைது

அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் சங்கர்லாலிடம் பேசிய செல்போன் எண்ணை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தொடர்பு கொண்டு கடத்தி வைத்துள்ள சசிகுமாரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அதைத்தொடர்ந்து அவர்கள் சசிகுமாரை விடுவித்தனர்.

இதுதொடர்பாக சசிகுமார் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து செந்தில்குமார், சுந்தரமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய பாஸ்கரை தேடி வருகின்றனர்.


Next Story