மஞ்சப்பை வழங்கும் எந்திரம் அறிமுகம்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் மஞ்சப்பை வழங்கும் எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனைமலை
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து அம்மனை தரிசிக்க வருகை தருகின்றனர். இந்தநிலையில் கோவில் நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் பை பயன்பாட்டை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது ரூ.25 ஆயிரம் மதிப்பில் மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தை தனியார் நிறுவனம் கோவிலுக்கு வழங்கியது. இந்த எந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 10 ரூபாய் நாணயத்தை எந்திரத்தில் செலுத்தி பக்தர்கள் மஞ்சப்பை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் கோவிலில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்படும். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் ரமேஷ், அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர்கள் திருமுருகன், மஞ்சுளா தேவி, தங்கமணி, மருதமுத்து, உதவி ஆணையர் விஜயலட்சுமி, கண்காணிப்பாளர் புவனேஸ்வரி மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.