இலவச சட்ட ஆலோசனை பெற 'வீடியோ கால்' வசதி அறிமுகம்
இலவச சட்ட ஆலோசனை பெற ‘வீடியோ கால்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக ஆணைக்குழு கூட்டத்தில் நீதிபதி பேசினார்.
ஊட்டி
இலவச சட்ட ஆலோசனை பெற 'வீடியோ கால்' வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக ஆணைக்குழு கூட்டத்தில் நீதிபதி பேசினார்.
ஆணைக்குழு கூட்டம்
நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கூட்டம், ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான லிங்கம் தலைமை தாங்கி பேசியதாவது:-
சட்ட உதவி தேவைப்படுவோர் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகினால், வழக்கின் தன்மையை பொறுத்து, குழுவில் உள்ள வக்கீல்கள் வழக்கை நடத்துவார்கள்.
சட்ட உதவிக்கு ஆணைக்குழுவை நேரடியாக அணுக முடியாதவர்களுக்கு 'டெலி லா' சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே 'வீடியோ கால்' மூலம் இலவச சட்ட ஆலோசனைகளை பெறலாம். இதற்கு இ-சேவை மையங்களில் பதிவு செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இதுவரை 75 சதவீத வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உதவி பெற தகுதிகள்
இதைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர், பட்டியல் பழங்குடியினர், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 23-ல் குறிப்பிடப்பட்ட சிறை கைதி, பெண் அல்லது குழந்தை, ஊனமுற்றோர், இன வன்முறை, சாதி வன்கொடுமை, இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிற்சாலை தொழிலாளர்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் உள்ளிட்டோர் சட்ட உதவிகள் பெற தகுதி வாய்ந்தவர்கள் ஆவார்கள் என்று சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் ஹுசைன் ஆரிப் தெரிவித்தார்.
இதில் தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் வக்கீல் செபாஸ்டியன், இணை ஆலோசகர் வக்கீல் குணசேகரன், வக்கீல்கள் சங்க தலைவர் மகாதேவன், செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.