விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்
கம்பம் அருகே விளைநிலங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தின.
கம்பம் அருகே யானைகஜம் பகுதி அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் தனியார் விளை நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் வாழை, தென்னை உள்ளிட்டவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்த விவசாய நிலங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகள் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யானைகஜம் பகுதியில் உள்ள விவசாயி பொம்முராஜ் என்பவரது வாழை தோட்டத்தில் காட்டுயானைகள் கூட்டமாக புகுந்தன. பின்னர் அவை அங்கிருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தன. குலை தள்ளி தார் வெட்டும் பருவத்தில் இருந்த வாழைகள் வேரோடு சாய்க்கப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வாழைத்தார் அறுவடை செய்யும் நிலையில் உள்ள வாழை மரங்களை யானைகள் சேதப்படுத்தியதால், உற்பத்தி செலவை எடுக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். எனவே இப்பகுதி விவசாயத்தை காப்பாற்ற இங்குள்ள விவசாய நிலங்களை சுற்றி அகழியோ, மின் வேலியோ அமைக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சேதமடைந்த வாழை மரங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.