போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல்


போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல்

கோயம்புத்தூர்

வடவள்ளி

மருதமலையில் பேனர் வைப்பதில் நடந்த தகராறில் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து தாக்கியதில் அ.தி.மு.க.வை சேர்ந்த 2 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேனர் வைப்பதில் தகராறு

கோவை மருதமலை அடிவார பகுதியில் உள்ள கோவிலில் 6-வது ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு, பஸ் நிலைய பகுதி உள்பட சில இடங்களில் விழாவுக்கு வருபவர்களை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி ேகாவில் முன்பு பேனர் வைத்து விட்டு, மருதமலை அடிவார பஸ் நிலையத்திற்கு சென்று பேனர் வைக்க முயன்ற போது, தி.மு.க. பிரமுகர் பிரபாகர் மற்றும் சிலர் அங்கு பேனர் வைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே இதுபற்றிய தகவல் அறிந்ததும், அ.தி.மு.க. பிரமுகர் திவாகர் சம்பவ இடத்திற்கு வந்து, நாங்கள் பல முறை இங்கு பேனர் வைத்துள்ளோம். இங்கு வைப்போம் என தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது பற்றிய தகவல் அறிந்ததும் வடவள்ளி போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. பிரமுகர் திவாகர் என்பவர் தன்னை சிலர் தாக்கி விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். இதையடுத்து ஏராளமான அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர்.

இதேபோல் தி.மு.க பிரமுகர் பிரபாகருக்கு ஆதரவாகவும் சிலர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். இரு தரப்பிலும் ஏராளமானோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீஸ் நிலையத்திற்குள் போலீசார் திவாகரின் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க. பிரமுகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்.

5 பேர் கைது

அப்போது போலீஸ் நிலைய வளாகத்திற்குள் கையில் கட்டையுடன் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த அ.தி.மு.க.வினரை தாக்கினர். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த மகேஷ் (31), மணிகண்டன் (32) ஆகியோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அ.தி.மு.கவினரை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த அம்சராஜ் (38), சபரி (24), கார்த்திகேயன் (25), பேச்சியப்பன் (27), மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story