கல்வெட்டுடன் கூடிய வாமன அவதார கோட்டோவியம் கண்டுபிடிப்பு
மானாமதுரை அருகே வாமன அவதார கோட்டோவியம் கொண்ட கற்களை வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே வாமன அவதார கோட்டோவியம் கொண்ட கற்களை வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வாமன அவதார கோட்டோவியம்
மானாமதுரை அருகே சின்னகண்ணனூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் அக்கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்களான மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு 3 வாமன அவதார குறியீடு மற்றும் எழுத்து பொறிக்கப்பட்ட நிலக்கொடை கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது-
3 திசைகளில் இந்த உருவம் பொறித்த கல் நடப்பட்டுள்ளது. பொதுவாக நிவந்தம் கொடுக்கும் நிலத்தின் 4 திசைகளிலும் கற்கள் நடுவது வழக்கம். ஆனால் தற்போது 3 கற்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் வாமன அவதார உருவம் கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் கிழக்கே அமைந்த கல்லின் உருவத்தில் வலது கையில் குடையை பிடித்தவாறும், இடது கையில் கமண்டலத்தினை கீழே தொங்கவிட்டபடியும், இடையில் ஆடையானது முட்டிக்கால் வரைக்கும் அணிந்தபடி நின்ற கோலத்தில் இந்த கோட்டோவியம் உள்ளது. இதேபோல் இங்குள்ள அம்மன் கோவில் முன்பாக ஊருணி கரையில் வழிபாட்டில் உள்ள கல் புதைந்த நிலையில் உள்ளது.
தமிழ் எழுத்துக்கள்
இக்கல்லின் உருவத்தின் கையில் குடையினை பிடித்தவாறு வாமன உருவம் புதைந்து காணப்படுகிறது. மேற்கே அமைந்த கல் ஊரின் நாடக மேடை அருகே அமைந்துள்ளது. இவை இக்கிராம மக்களால் முனீஸ்வரன் சாமியாக வணங்கப்பட்டு வருகிறது. இதில் 3 வரிகள் கொண்ட தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த எழுத்துக்கள் முற்றிலுமாக சிதைந்து காணப்படுவதால் சரியான பொருளை அறிந்து கொள்ள முடியவில்லை.
இவை அனைத்தையும் பார்க்கும்போது ஒரு பெருமாள் கோவிலுக்கு நிலம் நிவந்தம் கொடுத்திருக்கலாம் எனவும், அதன் எல்லைக்கற்களாக இவை நடப்பட்டிருக்கலாம் என தெரியகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.