ஆன்லைனில் முதலீடு செய்யும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்


ஆன்லைனில் முதலீடு செய்யும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்; போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைனில் முதலீடு செய்யும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

ஆன்லைனில் முதலீடு செய்யும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தி உள்ளார்.

நம்ப வேண்டாம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைனில் முதலீடு செய்தல் தொடர்பாக டாட்டா இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி என்ற பெயரில் போலியாக இணையதளத்தை உருவாக்கி பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.41 லட்சத்து 5 ஆயிரத்து 949 மோசடி செய்த வழக்கில் வடமாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரின் வங்கி கணக்கில் சுமார் ரூ.14 கோடிக்கு மேல் பணபரிவர்த்தனை நடைபெற்று உள்ளது.

எனவே வீட்டில் இருந்து கொண்டே பணம் சம்பாதிக்க நினைக்கும் பெண்கள், ஆன்லைனில் ஏதாவது முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாமா என ஆன்லைனில் வேலை தேடும் வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இணையதளத்தில் வரும் முதலீடு சம்மந்தமான விளம்பரங்கள், இணைப்புகள் (லிங்க்) போன் கால்கள், வாட்ஸ்அப் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பவேண்டாம்.

மோசடி கும்பல்

ஆன்லைனை நம்பி முதலீடு செய்யும் போது முதலில் லாபம் தருவதுபோல் குறைவான பணத்தை உங்களுக்கு கொடுத்து உங்கள் ஆசையை தூண்டிவிட்டு பெரிய அளவில் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றும் மோசடி கும்பல் வலைதளங்களில் வலம் வருகிறது.

இதன் மூலம் பெரிய நம்பத்தகுந்த நிறுவனங்களின் பெயர்களில் போலியாக இணையதளங்களை உருவாக்கி உங்களை நம்ப வைத்து ஏமாற்றி பணம் பறிப்பு செய்கின்றனர். எனவே பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story