3-ம் வகுப்பு மாணவனை முட்டிபோட சொன்ன ஆசிரியர்: அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே 3-ம் வகுப்பு மாணவனை முட்டிபோட சொன்ன விவகாரம் தொடர்பாக அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அரசு பள்ளி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தொட்டியப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 32 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியை, ஒரு ஆசிரியை பள்ளியில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் ஆசிரியர்களுக்கான கூட்டத்திற்கு சென்று விட்டனர்.
இதனால் போடிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் மணிகண்டன் தொட்டியப்பட்டி அரசு பள்ளியில் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு சென்றார். அப்போது அவர் பள்ளி மாணவிகள் சிலரை தின்பண்டம் வாங்க கடைக்கு அனுப்பி உள்ளார். அப்போது 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், அவர்களுடன் சென்றதாக தெரிகிறது.
அதிகாரிகள் விசாரணை
அந்த மாணவன் திரும்பி வந்தபோது, ஆசிரியர் மணிகண்டன் அவனை கண்டித்துள்ளார். மேலும் அவனை முட்டி போட சொல்லி, அவனது பையில் குப்பையை திணித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவன் தனது பெற்றோரிடம் தெரிவித்தான். இதனால் மாணவனின் தாய் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார்.
இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பாலசுப்பிரமணியம், ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் அருள்மணி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் அரசு பள்ளிக்கு சென்றனர். அவர்கள் ஆசிரியர் மணிகண்டன் நடந்து கொண்ட விதம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.
அரசு பள்ளி மாணவனை, ஆசிரியர் முட்டி போட சொன்ன சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.