சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த 2 பேரிடம் விசாரணை
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் டாக்டர் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
கோவை
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் டாக்டர் உள்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
கோவை டி.ஐ.ஜி. தற்கொலை
கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த 7-ந் தேதி காலையில் தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் கோவை வந்து டி.ஐ.ஜி.யின் பாதுகாவலர் மற்றும் அங்கு பணியாற்றி வரும் போலீசார், டி.ஐ.ஜி.யின் மனைவி மற்றும் மகளிடம் விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் மனஅழுத்தம் காரணமாக டி.ஐ.ஜி. தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பல்வேறு கருத்துகள்
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனஅழுத்தம் காரணமாக ஐ.பி.எஸ். அதிகாரியான டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அத்துடன் அவருடைய தற்கொலை குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பரவின. சிலர் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்தனர். எனவே அவர்களிடம் எந்த அடிப்படையில் அதுபோன்ற கருத்துகளை தெரிவித்தனர்?, அதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்த கோவை மாநகர போலீசார் முடிவு செய்தனர்.
2 பேர் ஆஜர்
இதையடுத்து இந்திய மக்கள் மன்ற நிர்வாகியான சென்னை தாம்பரத்தை சேர்ந்த வராகி, பேசு தமிழா பேசு என்ற யூ.டியூப் கணக்கு நடத்தி வரும் சென்னையை சேர்ந்த ராஜவேல் நாகராஜ் உள்பட 7 பேருக்கு விசாரணை ஆஜராகும்படி கோவை போலீ சார் சம்மன் அனுப்பினர்.
அதன்படி நேற்று காலையில் வராகி, ராஜவேல் நாகராஜ் ஆகியோர் தனது நண்பர்களுடன் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் உதவி கமிஷனர் கரிகாலன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
5 மணி நேரம் விசாரணை
அவர்கள் கூறிய கருத்துகள் எவ்வித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது?, யாருடைய தூண்டுதலின் பேரிலாவது இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தார்களா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டனர். அதற்கு அவர்கள் பதிலளித்தனர். அவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.
இதில் வராகி என்பவர் டி.ஐ.ஜி. விஜயகுமார், தன்னிடம் வாட்ஸ்அப் காலில் பேசியதாக கூறி இருந்தார். எனவே அது தொடர்பாகவும் அவரிடம் கேட்கப்பட்டது.
காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை பிற்பகல் 3 மணி வரை 5 மணி நேரம் நடந்தது. விசாரணை முடிந்ததும் அவர்கள் வெளியே வந்தனர்.
காழ்ப்புணர்ச்சி இல்லை
பின்னர் விசாரணை குறித்து வராகி நிருபர்களிடம் கூறியதாவது:-
டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து நான் தெரிவித்த கருத்து தொடர்பாக போலீசார் என்னிடம் 42 கேள்விகளை கேட்டனர். அதற்கு நான் பதில் அளித்தேன். அது குறித்த ஆவணங்களை என்னிடம் கேட்டனர். எனவே நான் அதை தயார் செய்து விட்டு கொடுக்கிறேன் என்று கூறி உள்ளேன். அந்த ஆவணங்களையும் தயார் செய்து வருகிறேன்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு என்னிடம் என்ன சொன்னாரோ அதை தான் நான் பதிவு செய்தேன். இதில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் எனக்கு எவ்வித காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
6 பேருக்கு சம்மன்
இந்த வழக்கில் டி.ஐ.ஜி.க்கு மனஅழுத்தத்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உள்பட மேலும் 6 பேரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் 2 பேர் இன்று (புதன்கிழமை) ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக உள்ளனர். அவர்கள் கூறிய கருத்துகளுக்கான ஆதாரத்தை கேட்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.