கிரிப்டோ கரன்சியில் முதலீடு: ரூ.11 லட்சம் மோசடி செய்த குஜராத் ஆசாமி கைது
கிரிப்டோ கரன்சியில் முதலீடு: ரூ.11 லட்சம் மோசடி செய்த குஜராத் ஆசாமி கைது.
சென்னை,
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் பிரபல கப்பல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று இணையதளம் வாயிலாக நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அதை உண்மை என்று நம்பி, வங்கி பணபரிவர்த்தனை மூலமாக ரூ.11 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் நான் முதலீடு செய்த பணம் அபகரிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரும்படி வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, சைபர் கிரைம் போலீசாருக்கு, கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகியோர் இது பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் குஜராத் மாநிலம், சூரத்தைச்சேர்ந்த மகபூப் இப்ராகீம் (வயது 30) என்ற ஆசாமி இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. சைபர் கிரைம் தனிப்படை போலீசார் குஜராத் மாநிலம் சூரத் சென்று மோசடி ஆசாமி மகபூப் இப்ராகீமை கைது செய்து நேற்று சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. அந்த ஆசாமி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.