முதலீட்டு தொகை மோசடி: 5 போலி நிதி நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம் - பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை


முதலீட்டு தொகை மோசடி: 5 போலி நிதி நிறுவனங்களின் சொத்துகள் முடக்கம் - பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை
x

முதலீட்டு தொகை மோசடி புகாரை தொடர்ந்து 5 போலி நிதி நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை

அரசு பொருளாதார குற்றங்களை தடுப்பதற்காகவே தமிழக காவல்துறையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு என்ற பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் மூலம் போலி நிதி நிறுவனங்களின் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து அவற்றின் சொத்துகளை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு அவர்கள் இழந்த முதலீட்டுத் தொகையை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென சென்னை, மதுரை, கோவையில் சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டு, வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும், தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், தற்போது கீழ்கண்ட போலி நிதி நிறுவனங்களின் மீது வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவினால் 5 தனியார் நிறுவனங்களின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன.

அதன்படி கோவையில் உள்ள டிரீம் மேக்கர்ஸ் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.1,58,50,999 மதிப்பிலான அசையும் சொத்துகள், மதுரையில் உள்ள பிளசிங் அக்ரோ பார்ம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.13,11,330 மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள், ஜீவன் பிராப்பர்ட்டி புரோமோட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.56,11,541 மதிப்புள்ள அசையா சொத்துகள்,

கன்னியாகுமரியில் உள்ள சன் ஸ்டார் அக்ரோ பார்ம்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.22 லட்சம் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் மற்றும் தஞ்சையில் உள்ள ராஹத் டிரான்ஸ்போர்ட் கம்பெனிக்கு சொந்தமான 59 வாகனங்கள் அரசால் இடைமுடக்கம் செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட நிறுவனங்களுக்கு சொந்தமான ஏனைய சொத்துகளை இடைமுடக்கம் செய்யும் பணி காவல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இந்த நிறுவனங்களில் வைப்பீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வைப்புத் தொகையை திரும்ப பெற, தக்க ஆவணங்களுடன், சென்னை அசோக்நகரில் உள்ள கூடுதல் டி.ஜி.பி. அலுவலகத்தில் செயல்படும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story