சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் முதலீடுகள் தேடி வருகின்றன முதல்-அமைச்சர் பேட்டி


சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் முதலீடுகள் தேடி வருகின்றன முதல்-அமைச்சர் பேட்டி
x

அமைதி பூங்காவாக இருப்பதற்கு இதுதான் சாட்சி என்றும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் முதலீடுகள் தேடி வருகின்றன என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி,

கடந்த ஓராண்டில் நம்முடைய தமிழக அரசு முன்னெடுத்து இருக்கக்கூடிய திட்டங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய நிலையில் இருக்கிறதை யாரும் மறுக்க மாட்டீர்கள். அந்தவகையில் ''மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி'' என்ற வாக்குறுதி எப்படி நிறைவேறுகிறது? என்பதை பார்ப்பதற்காகத்தான் டெல்டா பகுதியில் மின்னல் வேக சுற்றுப்பயணத்தை நடத்தி முடித்து வந்திருக்கிறேன்.

கடந்த ஆண்டே மகசூல் பெருகிவிட்டது. அதில் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். காவிரி டெல்டா பாசன பகுதிகளாக இருக்கக்கூடிய தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் வழக்கமாக 3.5 லட்சம் ஏக்கர் குறுவை நெல்சாகுபடி மேற்கொள்ளப்படும்.

உற்பத்தியில் சாதனை

கடந்த ஆண்டு இந்த மாவட்டங்களின் கடைமடை வரைக்கும் தண்ணீர் தங்கு தடையின்றி செல்லக்கூடிய வகையில் ரூ.65 கோடியில் 4 ஆயிரத்து 61 கி.மீ. தூரத்துக்கு அனைத்து நீர்வழி தடங்களையும் தூர்வாரக்கூடிய வகையில் 647 பணிகளை செயல்படுத்தினோம். அதன் உரிய நாளாக இருக்கக்கூடிய ஜூன் 12-ந்தேதியன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

ரூ.61 கோடியே 9 லட்சத்துக்கு குறுவை தொகுப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக குறுவையில் கடந்த ஆண்டில் 4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரும், சம்பாவில் 13 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கரும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி பயிர் சாகுபடி, உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டது.

தூர்வாரும் பணிகள்

இதே சாதனையில் இந்த ஆண்டும் தொடர்ந்து ஏற்படுத்துவதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம். இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பே டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4 ஆயிரத்து 964 கி.மீ. தூரத்துக்கு தூர்வாருவதற்கான 683 பணிகள் விரைவாக முடிக்க உத்தரவிட்டு இருந்தேன்.

அதன்படி, முதற்கட்டமாக வருவாய்த்துறை ஒத்துழைப்போடு, அனைத்து நீர்நிலைகளின் எல்லைகளும் அளக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் எல்லாம் அகற்றப்பட்டு, இந்த பணிகள் அனைத்தும் 23-ந்தேதி தொடங்கப்பட்டது. நீர்வழிப்பாதைகள் தூர்வாரும் பணிகள் சிறப்பாக முடிக்கப்பட்டு இருக்கிறது. 1,580 கி.மீ. நீளமுள்ள சி மற்றும் டி வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்பட உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 418 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டும் சாதனை

இன்றைய தேதியில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 351 ஏக்கர் அளவில் குறுவை சாகுபடியில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான உதவிகளை செய்வதில் தி.மு.க. அரசு எப்போதும் பின்வாங்கியது கிடையாது. விவசாயிகளின் நலன் கருதி இந்த ஆண்டும், ரூ.61 கோடி மதிப்பிலான குறுவை தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் 3 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். நெல் உற்பத்தியில் கடந்த ஆண்டு சாதனையானது இந்த ஆண்டும் தொடரப்போகிறது.

அதைவிட கூடுதல் பயன் அடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. முன்கூட்டியே திறந்துவிடப்பட்டுள்ள காவிரி நீரை முறையாக பயன்படுத்தியும், தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தக்கூடிய பல்வேறு விவசாயிகள் நலத்திட்டங்களை பயன்படுத்தியும் நெல் உற்பத்தியில் புதிய சாதனையை டெல்டா விவசாயிகள் இந்த ஆண்டும் படைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

முதலீடுகள் தேடி வருகின்றன

கேள்வி:- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். உங்களுடைய பார்வையில் கடந்த ஒரு ஆண்டில் எப்படி இருக்கிறது?

பதில்:- நானும் ஒரு ஆள் இருக்கேன் என்று மக்களுக்கு சொல்வதற்காக ஒவ்வொரு நாளும், எதையாவது ஒன்றை சொல்லிக்கொண்டு இருக்கிறார். தி.மு.க. பொறுப்பேற்றதற்கு பிறகு கலவரம், சாதி-மத மோதல்கள், துப்பாக்கி சூடுகள், கூட்டு வன்முறைகள் இதெல்லாம் எந்த சம்பவமும் நடக்காத ஒரு ஆட்சியாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதனால்தான் முதலீடுகளும் தேடி வரும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. எனவே தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதற்கு இது ஒரு சாட்சி.

கேள்வி:- அரசு ஊழியர்கள் இன்றைக்கு 27 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். அடுத்தடுத்து ஏராளமானோர் ஓய்வு பெற இருக்கிறார்கள். அவர்களுக்கான பணப்பலன் கிடைக்குமா? ஓய்வு பெறும் வயதை குறைக்கும் திட்டம் இருக்கிறதா?

பதில்:- அதெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். முடிந்ததற்கு பிறகு விளக்கமாக சொல்கிறேன்.

கேள்வி:- அரசாங்கத்தின் ரகசிய விஷயங்கள் எல்லாம் அண்ணாமலைக்கு எப்படி தெரிகிறது? அரசாங்கத்துக்கு முன்கூட்டியே அவர் பதிலும் கூறிவருகிறாரே? எப்படி?

பதில்:- என்ன பதில் சொல்கிறார். அண்ணாமலை அரசியல் செய்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லதை செய்கிறோம். அவ்வளவுதான். அதுதான் வித்தியாசம்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

முன்னதாக, தூர்வாரும் பணிகள் குறித்த வீடியோ தொகுப்பு பத்திரிகையாளர்களுக்கு ஒளிபரப்பி காண்பிக்கப்பட்டது.


Next Story