தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முதலீட்டாளர்கள் இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக இருப்பதை காட்டுகிறது. தொழில் தொடங்க உகந்த இடம் என்ற இடத்தில் தமிழகம் உள்ளது.
தமிழகத்தில் புத்தொழில் நிறுவனங்கள் உருவாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தொழில்துறையில் 13-வது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு வந்துள்ளோம். பெண்கள் தொடங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது.
புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலக அளவிலான முதலீட்டார்கள் பங்குபெற வேண்டும். மதுரை, நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் தொழில் ஆலோசனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர், பழங்குடியினர் புத்தொழில் நிறுவனம் தொடங்கினால் மானியம் அளிக்கப்படுகிறது. மும்பை, டெல்லி போன்ற நகரங்களை விட சென்னையில் அதிக புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
தொழில்கள் தொடங்கி எளிதாக முன்னேற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 13-வது இடத்தில் இருந்து தொழில்துறை 3ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அனைத்து துறை வளர்ச்சியை முக்கியமாக கொண்டது தமிழக அரசு. மாநிலம் முழுவதும் பரவலாக வளர்ச்சி ஏற்பட வட்டார புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக கால நிலை மாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.