கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள்:வெளிமாநிலங்களுக்கு சென்று கைது செய்த தனிப்படை போலீசார்
ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் தொடர்புடையவர்களை வெளிமாநிலங்களில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்திய வழக்கில் தொடர்புடையவர்களை வெளிமாநிலங்களில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
3 தனிப்படைகள்
மதுரை நகரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டார். அதன் பேரில் கஞ்சாவை மொத்தமாக ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களிலிருந்து வாங்கி அவற்றை கடத்தி, வியாபாரம் செய்யும் செயலில் ஈடுபட்டு வந்த மிக முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் என்ற ஜே.கே. என்பவரை பிடிக்க கமிஷனர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் திலகர்திடல் உதவி கமிஷனர் மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன் (எஸ்.எஸ்.காலனி), பெத்துராஜ் (கீரைத்துறை), காசி (திடீர்நகர்), முருகன் ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ஒடிசாவில் கைது
அவர்கள் தலைமறைவாக உள்ள கஞ்சா வியாபாரி ஜெயக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வந்த போது ஜெயக்குமார் ஒடிசாவில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படையினர் ஒடிசா மாநிலத்திற்கு விரைந்து சென்று அங்கு மறைந்திருந்த ஜெயக்குமாரை (வயது 35) கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 4 லட்சம் ரூபாய், 3 செல்போன்கள், 3 மோடம், போலி வாகன நம்பர் பிளேட்டுகள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஜெயக்குமார் கீரைத்துறை போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் பிடிபட்ட 2,090 கிலோ கஞ்சா வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார்.
கூட்டாளிகளும் கைது
பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது கூட்டாளிகளான ராதா என்ற ராதாகிருஷ்ணன் (32), சிவக்குமார் என்ற வாழைப்பழ சிவக்குமார் (38), ஜோஸ் என்ற மெர்வின்ஜோஸ் (24) ஆகியோர் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அனைக்காபள்ளி நெடுஞ்சாலை பகுதியில் இருப்பதாக தெரிவித்தார்.
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்தனர். பிடிப்பட்ட அவர்கள் 4 பேரும் அங்குள்ள மாநில கோர்ட்டுகளில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கைக்கு கடத்தல்
கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் மீது தமிழகமெங்கும் 7 கஞ்சா வழக்குகள் உள்பட 26 வழக்குகள் உள்ளன. சிவக்குமார் மீது 13 வழக்குகளும், ராதாகிருஷ்ணன் 6 வழக்குகளும், ஜோஸ் மீது 6 வழக்குகள் உள்ளன. இவர்கள் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து அதனை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்தனர்.
மேலும் கஞ்சாவை ராமேசுவரத்தில் இருந்து படகுகள் மூலம் இலங்கைக்கும் கடத்தி உள்ளனர். பிடிபட்டவர்களை தனிப்படையினர் கடந்த 6 மாதங்களாக கண்காணித்து அவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்டு வெளிமாநிலங்களுக்கு சென்று கஞ்சா கடத்தியவர்களை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் பாராட்டினார்.