அதிமுகவில் பிரிந்துள்ள அணிகளை வைத்து ஐபிஎல் மேட்ச் நடத்தலாம் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
கடந்த இரண்டு ஆண்டுகளில் 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஈரோடு,
திருச்சியில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்கிற தலைப்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதனை தொடர்ந்து
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றை சொல்லகூடிய இந்த கண்காட்சி சென்னை, மதுரை, கோவையை தாண்டி தற்போது திருச்சியில் நடைபெற்று வருகிறது. 50 வருட உழைப்பை இந்த கண்காட்சியில் நாம் காணலாம். ஒவ்வொரு முறையும் இந்த கண்காட்சியை பார்க்கும்போது வெவ்வேறு அனுபவங்கள் எனக்கு கிடைக்கிறது என்றார்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈரோடு அக்ரஹாரம் மரப்பாலம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வாகனம் மூலம் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் பிரதமரை சந்தித்து நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று முறையிட்டுள்ளேன். எடப்பாடி பழனிசாமி அவர்கள் டெல்லி செல்வதற்கு முன்பு என்ன பேசினார் என்றும், டெல்லி சென்று வந்த பின்பு என்ன பேசினார் என்று அனைவருக்கும் தெரியும்.
அதிமுகவில் எத்தனை அணிகள் உள்ளது என்று யாருக்கும் தெரியாது ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, டிடிவி அணி என பல அணிகள் அதிமுகவில் உள்ளது. அதிமுகவில் பிரிந்துள்ள அணிகளை வைத்து ஐபிஎல் மேட்ச் நடத்தலாம் என்று விமர்சித்துள்ளார். மேலும் தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக்கும் இயக்கம் திமுக அல்ல. மிசாவை பார்த்து இயக்கம் இது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 80 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.