அயர்லாந்து பெண்ணின் உடல் கிரிவலப்பாதை மயானத்தில் தகனம்
சாத்தனூர் அருகே பண்ணை வீட்டில் இறந்த அயர்லாந்து பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது விருப்பப்படி கிரிவலப்பாதையில் உள்ள மயானத்தில் சமூக சேவகர் தகனம் செய்தார்.
சாத்தனூர் அருகே பண்ணை வீட்டில் இறந்த அயர்லாந்து பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது விருப்பப்படி கிரிவலப்பாதையில் உள்ள மயானத்தில் சமூக சேவகர் தகனம் செய்தார்.
அயர்லாந்து பெண்
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகில் உள்ள நெடுங்காவாடி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அயர்லாந்து நாட்டை சேர்ந்த அனார்லூசார்டி (வயது 72) என்ற பெண் வசித்து வந்தார்.
தனியாக வசித்து வந்த இவர் கடந்த மாதம் 23-ந் தேதி அழுகிய நிலையில் வீட்டிலேயே பிணமாக கிடந்தார். பின்னர் அவரது உடல், பண்ணை வீட்டின் வளாகத்திலேயே புதைக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி அனார்லூசார்டி புதைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். இதையடுத்து அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். பின்னர் கடந்த 27-ந் தேதி அந்த பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முதுமை காரணத்தினால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
காசியில் கரைக்க விருப்பம்
அனார்லூசார்டி உயிருடன் இருந்த சமயத்தில் அவரது நண்பர்களிடம் தான் இறந்து விட்டால் தனது உடலை திருவண்ணாமலையில் தகனம் செய்து அஸ்தியை காசியில் கரைக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த சமூக சேவகர் மணிமாறன் உயிரிழந்த அனார்லூசார்டியின் விருப்பப்படி போலீசாரிடம் அனுமதி பெற்று அந்த பெண்ணின் உடலை ஆம்புலன்சு மூலம் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்று தகனம் செய்தார்.