நெல்லையில் குரூப்-2 தேர்வில் குளறுபடி


நெல்லையில் குரூப்-2 தேர்வில் குளறுபடி
x

நெல்லையில் குரூப்-2 தேர்வில் தேர்வர்களுக்கு வினாத்தாள் மாறி வழங்கியதால் குளறுபடி ஏற்பட்டது. இதனால் தேர்வு தாமதமாக தொடங்கியது.

திருநெல்வேலி

இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், துணை பதிவாளர், நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி உள்ளிட்ட ஒருங்கிணைந்த பணிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வானது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான குரூப்-2, 2 ஏ ஆகியவற்றின் முதன்மை தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இந்த தேர்வுக்காக நெல்லை மாவட்டத்தில் 24 அமைவிடங்களில் 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 5,070 பேர் விண்ணப்பித்தனர். முதன்மை தேர்வையொட்டி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தமிழ் மொழி தகுதிதாளும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை பொதுத்தாளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில் நெல்லை மாநகர பகுதியில் தேர்வு நடைபெற்ற சில மையங்களில் தேர்வர்களுக்கான பதிவெண்ணும், வினாத்தாளில் குறிப்பிடப்பட்ட எண்ணும் மாறியதால் ஒத்துப்போகாததாக கூறி சிறிதுநேரம் தேர்வு தாமதமானது. பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்திலும் தேர்வர்களுக்கு வினாத்தாள் எண் மாறி வழங்கியதால் குளறுபடி ஏற்பட்டது. தேர்வு எழுதுவதில் குழப்பம் நிலவியதால் தேர்வர்கள் அறையை விட்டு வெளியே வந்தனர்.

இதற்கிடையே தேர்வு மையத்துக்கு சிறிது நேரம் தாமதமாக வந்த 10-க்கும் மேற்பட்ட தேர்வர்களும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களும் தேர்வர்களுடன் சேர்ந்து தேர்வு மைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே நெல்லை மாநகர தலைமையிடத்து துணை போலீஸ் கமிஷனர் அனிதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணி நேர தாமதத்திற்கு பின்னர் தேர்வர்கள் அந்த மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு தேர்வை எழுத தொடங்கினர். அவர்களுக்கு தாமதத்தை ஈடுசெய்யும் வகையில் கூடுதல் நிமிடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் தாமதமாக தேர்வு தொடங்கிய அந்த ஒரு மணி நேரமும் ஈடுசெய்யப்படும் என்று கூறினார். தொடர்ந்து அந்த கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

மாலையில் நடைபெற்ற தேர்வு 2 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 2.30 மணிக்கு தொடங்கியது. நெல்லை மாவட்டம் முழுவதும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய 31 வீடியோகிராபர்கள், தேர்வினை கண்காணிக்கும் வகையில் 30 தேர்வு ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். தேர்வையொட்டி தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மருத்துவ குழு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வு மைய வளாகத்திற்குள் மற்ற நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

நெல்லை மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 5,050 பேரில் 4,770 பேர் தேர்வு எழுதினார்கள். 280 பேர் தேர்வு எழுத வரவில்லை.


Next Story