சோலார் விளக்கு அமைத்ததில் முறைகேடு


சோலார் விளக்கு அமைத்ததில் முறைகேடு
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி பகுதிகளில் சோலார் விளக்கு அமைத்ததில் முறைகேடு நடந்து உள்ளதாக வடக்கு ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஊராட்சி பகுதிகளில் சோலார் விளக்கு அமைத்ததில் முறைகேடு நடந்து உள்ளதாக வடக்கு ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

ஒன்றியக்குழு கூட்டம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக்குழு கூட்டம், மன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் விஜயராணி ரங்கசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஆணையாளர் முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆனந்த் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, சமூக நலத்துறை உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டு திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்கள். கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:-

முறைகேடு

ஊராட்சி பகுதிகளில் சோலார் விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பணி முடிந்தும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இதற்கு முன்பு பணியில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார். மேலும் அதற்கான ஆதாரத்தை அழித்து உள்ளனர். ஆனால் எங்களிடம் போதிய ஆதாரம் உள்ளது. எனவே இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கு திட்டமிட்டு உள்ளோம். மேலும் சோலார் விளக்கு பிரச்சினையில் உரிய தீர்வு காணவில்லை என்றால் அடுத்த கூட்டத்தை ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணிப்போம்.

சுற்றுச்சுவர் வேண்டும்

ஒன்றிய பொது நிதியில் எவ்வளவு நிதி உள்ளது? என்பது குறித்த விவரத்தை தெரிவிக்க வேண்டும். ஜல்ஜீவன் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உள்ளது. எனவே புதிதாக கட்டிடங்கள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிந்தனூரில் பள்ளி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு உள்ளதால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே சுற்றுச்சுவர் கட்டி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story