ரூ.1.20 கோடி நிலத்தை முறைகேடாக பதிவு செய்தஓட்டப்பிடாரம் துணை தாசில்தார்,கிராம நிர்வாக அதிகாரி பணி இடைநீக்கம்


ரூ.1.20 கோடி நிலத்தை முறைகேடாக பதிவு செய்தஓட்டப்பிடாரம் துணை தாசில்தார்,கிராம நிர்வாக அதிகாரி பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1.20 கோடி நிலத்தை முறைகேடாக பதிவு செய்த ஓட்டப்பிடாரம் துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி

ரூ.1.20 கோடி நிலத்தை முறைகேடாக பதிவு செய்த ஓட்டப்பிடாரம் துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முறைகேடு

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா எப்போதும்வென்றான் கிராமத்தில் உள்ள ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 40 சென்ட் அரசு சர்க்கார் மனை நிலத்தை அரசின் விதிமுறைகள் ஏதும் பின்பற்றாமல், தன்னிச்சையாக வட்டக்கணக்கு மற்றும் நத்தம் நிலவரித்திட்ட தூய சிட்டா பதிவேட்டில் முறைகேடாக பதிவுகள் செய்யப்பட்டு உள்ளது.

விதிமுறைகளுக்கு புறம்பாக நத்தம் பட்டா வழங்கியும், கிராம நிர்வாக அலுவலகத்தில் வைக்கப்பட வேண்டிய பதிவேட்டை தனது வீட்டில் வைத்து முறைகேட்டில் ஈடுபட்டும், முறைகேடான பட்டாவுக்கு தூய நகல் பட்டா வழங்கியும் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தாரும், எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலரும் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

பணியிடை நீக்கம்

இதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் எஸ்.வடிவேல்குமார், எப்போதும்வென்றான் கிராம நிர்வாக அலுவலர் பி.முத்துவேல் கண்ணன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story