ரூ.43½ லட்சத்தில் பாசன கால்வாய் தூர்வாரும் பணி


ரூ.43½ லட்சத்தில் பாசன கால்வாய் தூர்வாரும் பணி
x
தினத்தந்தி 17 Sept 2023 4:30 AM IST (Updated: 17 Sept 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை பகுதிகளில் ரூ.43 லட்சத்து 46 ஆயிரத்தில் பாசன கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை பகுதிகளில் ரூ.43 லட்சத்து 46 ஆயிரத்தில் பாசன கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சோலபாளையத்தில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தூர்வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அப்போது ஆணையாளர் பாலசுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) லதா ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் வடுகபாளையத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளின் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்த கலெக்டர் பொருட்கள் சரியாக வினியோகம் செய்யப்படுகிறதா? இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது தாசில்தார் ஜெயசித்ரா உடன் இருந்தார்.

இதுகுறித்து கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:-

44 பணிகள்

பி.ஏ.பி. திட்டத்தில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன பரப்பு கிளை கால்வாய்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி ஆனைமலை தாலுகாவில் தென்சங்கம்பாளையம், சோமந்துறைசித்தூர், பெத்தநாயக்கனூர், அங்கலகுறிச்சி, ஜல்லிப்பட்டி, கரியாஞ்செட்டிபாளையம், ஆத்துப்பொள்ளாச்சி ஆகிய இடங்களில் ரூ.21 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டில் 14 பணிகள் நடைபெற்று வருகிறது.

தெற்கு ஒன்றியத்தில் மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி, சோலபாளையம், கோலார்பட்டி, கூளநாயக்கன்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரபாளையம், எஸ்.மலையாண்டிபட்டிணம், பழையூர், நாட்டுக்கல்பாளையம், சிங்காநல்லூர், அம்பராம்பாளையம் ஆகிய இடங்களில் ரூ.11 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பில் கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

வடக்கு ஒன்றியத்தில் அய்யம்பாளையம், போடிபாளையம், மண்ணூர், திம்மங்குத்து, நல்லுத்துக்குளி ஆகிய பகுதிகளில் ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பிலும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் செஞ்சேரிப்புதூர், கம்பாளப்பட்டி, தாளக்கரை ஆகிய பகுதிகளில் ரூ.5 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் என மொத்தம் 44 பணிகள் ரூ.43 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் கால்வாய் தூர்வாருதல், செடிகொடிகள், மண் குவியல்களை அகற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story