கழிவுநீர் வடிகாலாக மாறிய பாசன வாய்க்கால்
பட்டுக்கோட்டையில் கழிவுநீர் வடிகாலாக பாசன வாய்க்கால் மாறி உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில் கழிவுநீர் வடிகாலாக பாசன வாய்க்கால் மாறி உள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பாசன வாய்க்கால்
பட்டுக்கோட்டை நாடியம்பாள்புரம் பாசன வாய்க்கால் தற்போது கழிவுநீர் வாய்க்காலாக மாறிவிட்டது. கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்காலான இந்த வாய்க்காலில், தற்போது பாசனத்திற்கு தண்ணீர் வருவதில்லை. அருகில் உள்ள வீடுகளில் இருந்து குழாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் பாசன வாய்க்காலில் கழிவுநீர் விடப்படுகிறது.
மேலும், குப்பைகள் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக தண்ணீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இந்த வாய்க்காலில் பாசனத்திற்கு நல்ல தண்ணீர் வருவதில்லை.
எனவே, நகராட்சி அதிகாரிகள் நாடியம்பாள்புரம் பாசன வாய்க்காலில் குப்பைகள் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, முறையாக தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தீர்மானம்
இந்த நிலையில் பட்டுக்கோட்டை, கரிக்காடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை கூட்டம் மூத்த உறுப்பினர் மெரினா ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் கந்தசாமி கலந்து கொண்டு பேசினார். இதில், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மோரிஸ் அண்ணாதுரை, சாமிநாதன், விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், கணபதி சுந்தரம், பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பட்டுக்கோட்டை நாடியம்பாள்புரம் பாசன வாய்க்காலில் சட்டவிரோதமாக விடப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களை பிடுங்கி அகற்ற வேண்டும். கழிவுநீர் வாய்க்காலாக மாறிவிட்ட பாசன வாய்க்காலை, உடனடியாக சீரமைக்க வேண்டும். இந்த கழிவு நீர் வாய்க்காலை, மீண்டும் பாசன வாய்க்காலாக விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.