பாசன காலத்தை 135 நாட்களாக உறுதி செய்ய வேண்டும்


பாசன காலத்தை 135 நாட்களாக உறுதி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கு பாசன காலத்தை 135 நாட்களாக உறுதி செய்ய வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆழியாறு புதிய ஆயக்கட்டுக்கு பாசன காலத்தை 135 நாட்களாக உறுதி செய்ய வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது ஆழியாறு படுகை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசாணையில் பாசன காலம் 135 நாட்கள் ஒதுக்கீடு செய்யப்படும். தண்ணீரை தேவைக்கு ஏற்ப, இவ்வளவு பாசன பரப்பிற்கு பயன்படுத்தவும் என்று வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு மாறாக பாசன காலம் 120 நாட்களுக்குள் என குறைத்தும், பாசன பரப்பை குறிப்பிடாமல் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பயிர் சாகுபடி காலம் 4½ மாதங்கள் ஆகும்.

பாசன காலம்

இதேபோன்று பாசனத்தின்போது மழை பெய்யும் காலங்களில் தண்ணீரை நிறுத்தி விட்டு தேவையான சமயத்தில் நீரை பெற்று கொள்ளவே 135 நாட்கள் என நிர்ணயித்து பாசனம் நடைபெற்று வந்தது. மேற்கண்ட பாசன நடைமுறைகளை மாற்றி அரசாணை பெறப்பட்ட காரணத்தை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் அந்த அரசாணையை மாற்றி அமைத்து மறு ஆணை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 28-ந்தேதி அரசாணையை ஏற்று தண்ணீர் திறக்க ஒத்துழைப்பு அளித்தோம். இருப்பினும் பாசன காலம் மொத்தம் 135 நாட்கள் என உறுதி செய்த பிறகே நடப்பாண்டில் பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்துவோம் என்று பாசன விவசாயிகள் தீர்மானித்து உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோன்று வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்புகள், மின் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.


Next Story