தடை விதித்தால் போதுமா? 'பிளாஸ்டிக்' ஒழியுமா?


தடை விதித்தால் போதுமா? பிளாஸ்டிக் ஒழியுமா?
x

தடை விதித்தால் போதுமா? ‘பிளாஸ்டிக்' ஒழியுமா? என பல்வேறு தரப்பினர் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

கரூர்

எங்கும் பிளாஸ்டிக். எதிலும் பிளாஸ்டிக். அதுதான் இன்றைய நம்முடைய அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது.

காலையில் எழுந்ததும் பல் துலக்குவது, பாத்திரம் விளக்குவது, காய்கறி வாங்குவது என அனைத்து பயன்பாட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆக்கிரமிப்புதான்.

எளிதில் எடுத்துச்செல்லலாம், வேண்டாம் என்றால் வீசிவிட்டுப் போகலாம். விலையோ மலிவு, பொருளும் மெலிது, கையாளுவது எளிது. இதுபோன்ற சாதகமான அம்சங்கள்தான் நமது பழக்க வழக்கங்களில் இருந்து, பிளாஸ்டிக் பொருட்களைப் பிரிக்க முடியாமல் செய்கிறது.

பிளாஸ்டிக்கின் வரவால் நாம் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலகிப் போய்க்கொண்டு இருக்கிறோம்.

ஒரு பிளாஸ்டிக் பையின் பயன்பாடு என்பதோ, குறுகிய நேரம் மட்டும்தான். அதன் பிறகு அதை தூக்கி வீசிவிடுகிறோம். ஆனால் அது ஏற்படுத்தக்கூடிய எதிர்விளைவுகளை யாரும் எண்ணி பார்ப்பது இல்லை.

இதை எல்லோரும் தெரிந்தே செய்கிறோம் என்று சுற்றுச்சூழல், உயிரின ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். அதிலும் அதிகம் படித்தவர்கள்தான் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை அதிகளவில் ஊக்கப்படுத்துகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பயன்படுத்த தடை

பிளாஸ்டிக் பொருட்களில் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருப்பவை, 'யூஸ் அன்ட் துரோ' என்று சொல்லப்படுகிற ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகள்தான்.

இதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கடந்த ஜூலை மாதம் 1-ந் தேதியில் இருந்து, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அறிவித்ததோடு, இந்த பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, வினியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்துக்கும் தடை விதிப்பதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்கள் தடையை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது. பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பலூனில் கட்டப்படும் பிளாஸ்டிக் குச்சி, பிளாஸ்டிக் கொடி, மிட்டாயின் பிளாஸ்டிக் உறை, ஐஸ்கிரீம் குச்சி, அலங்கார வேலைகளுக்கான தெர்மகோல், சாப்பிட பயன்படுத்தும் பிளாஸ்டிக் முள்கரண்டி, தேக்கரண்டி, கத்தி, சுவீட் பாக்ஸ், அழைப்பிதழ், சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை சுற்றி கட்டப்படும் பிளாஸ்டிக் சுருள்கள், பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி. பேனர்கள் ஆகியவற்றுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக, உணவுப்பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள், தெர்மகோல் தட்டுகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சுக்குழாய்கள், தூக்குபைகள் ஆகியவற்றை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாத்தியமாகி இருக்கிறதா?

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடையை கண்காணிக்கவும், அமல்படுத்தவும் தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு, பிளாஸ்டிக் தடையை கண்காணித்து வருகிறது. இதில் அனைத்து துறை செயலாளர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் உள்பட 19 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழு 2 மாதத்துக்கு ஒருமுறை கூடி பிளாஸ்டிக் தடை குறித்து விவாதித்து வருகிறது. மேலும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த மாவட்டம், மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது போன்ற தகவல்களை சமீபத்தில் தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

இந்த தடை உத்தரவு வருவதற்கு முன்பே தமிழக அரசு 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தை தொடங்கி, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தியது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தானியங்கி எந்திரங்களும் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மஞ்சப்பை வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை, நடைமுறையில் சாத்தியமாகி இருக்கிறதா என்பது பற்றி பலதரப்பு மக்கள் மற்றும் அதிகாரியிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

100 சதவீதம் ஒழிக்க முடியாது

தமிழ்நாடு-பாண்டி பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்கரன் கூறுகையில், 'சின்ன கடைகள், உற்பத்தியாளர்களை நசுக்குகிறார்கள். பெரிய கடைகள், உற்பத்தியாளர்களை கண்டுகொள்வதில்லை. ஒருசாராருக்கு சாதகமான தடையாக இது இருக்கிறது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை என்று சொல்கிறார்கள். அண்டை மாநிலமான புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத்தில் தடை இல்லை. அங்கிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. மோனோ லேயர், மல்டி லேயர் என்று பிளாஸ்டிக் இருக்கிறது. இதில் மல்டி லேயர் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்ய முடியாது. ஆனால் அதற்கு அனுமதி. மறுசுழற்சி செய்யக்கூடிய மோனோ லேயர் பிளாஸ்டிக்குக்கு தடை என்கிறார்கள். காரணம், மல்டி லேயர் பிளாஸ்டிக்குகளை பெரிய நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. பிளாஸ்டிக் தடை உத்தரவில் ஒன்று மட்டும் தெரிகிறது. பெரிய நிறுவனங்கள் செயல்பட வேண்டும். சிறிய நிறுவனங்கள் செயல்படக்கூடாது என்ற நோக்கம்தான் அது. பிளாஸ்டிக்கை குறைக்கவேண்டும் என்ற தெளிவு இல்லை. 100 சதவீதம் இதை ஒழிக்க முடியாது. இதற்கு மாற்றாக சிறந்த பொருட்களை விலையில், தரத்தில், உபயோகத்தில் இருக்கும்வகையில் கொண்டுவரவேண்டும். பாக்கு தட்டு, பேப்பர் பை ஆகியவை ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான். அதைத்தான் மாற்று ஏற்பாடு என்கிறார்கள். ஏற்கனவே இருந்த அந்த பொருட்கள் சரியில்லை என்பதால்தான் மாற்றாக பிளாஸ்டிக் வந்தது. பிளாஸ்டிக் தடை என்பது வெளிநாட்டு நிறுவனங்களின் ஊழல்' என்றார்.

நிலத்தடி நீர் பாதிக்கப்படும்

வெள்ளியணை அருகே உள்ள வெடிக்காரன்பட்டியை சேர்ந்த சேதுபதி:-

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை இன்று நாம் பயன்படுத்துவது வருங்கால சந்ததிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே செயற்கை உரங்களை பயன்படுத்தி மண்ணை ரசாயன தன்மைக்கு மாற்றி உள்ளோம். இதனால் விளையும் கேடுகளை உணர்ந்துதான் இப்போது இயற்கை விவசாயத்திற்கு ஒரு சிலர் மாறி வருகின்றனர். அந்த வகையில் இன்று மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி மண்ணில் தூக்கி எறியும் போது அதனால் நிலத்தடி நீர் வளமும் மண்வளமும் கண்டிப்பாக பாதிக்கப்படும். இதை தாமதமாக புரிந்து கொண்டு அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை அறிவித்துள்ளது. ஆனால் அது பெயரளவில் தான் உள்ளது. இன்றும் அதிக அளவில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு இருந்து கொண்டு தான் உள்ளது.இதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு பயன்பாட்டை தடுப்பது மட்டுமல்லாமல், உற்பத்தியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அப்போதுதான் வருங்கால சந்ததிகளின் வாழ்வு வசந்தமாக இருக்கும்.

விழிப்புணா்வு ஏற்படுத்த ேவண்டும்

செல்லாண்டிபுரத்தை சேர்ந்த நதியா:-

நகரம் முதல் கிராமம் வரை அனைத்து கடைகளிலும் பொருட்களை போட்டு தருவதற்கு பிளாஸ்டிக் பைகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் காய்கறி, இறைச்சி, மளிகை உள்ளிட்ட பல்ேவறு கடைகளுக்கு செல்லும் பொதுமக்களும் துணி பைகளை கொண்டு செல்வதில்லை. அங்கு சென்று பொருட்களை வாங்கிய பின் அதை எடுத்து செல்ல தடுமாறும் போது, கடைக்காரர்கள் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை போட்டு தருகின்றனர். இதைை தடுக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் இடங்களில் முழுவதுமாக ஆய்வு செய்து உற்பத்தி இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் இந்த பைகள் உள்நுழைவதை தடுக்க வேண்டும்.

முற்றிலுமாக கைவிட்டால் நல்லது

குளித்தலையில் தள்ளுவண்டியில் பிரியாணி வியாபாரம் செய்யும் ஜஹாங்கீர்:-

பொதுமக்கள் பலர் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொழுது வீட்டில் இருந்து பைகளோ பாத்திரங்களோ கொண்டு செல்லும் பழக்கம் இன்றைய காலகட்டத்தில் இல்லை. பெரும்பாலானோர் மிகவும் சோம்பேறி ஆகிவிட்டனர். கடையில் கருவேப்பிலை, கொத்தமல்லி வாங்கினால் கூட அதை பிளாஸ்டிக் பைகளில் போட்டுக் கொடுக்குமாறு கேட்டு வாங்கி செல்கின்றனர். ஒவ்வொரு தனி மனிதனும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக கைவிட்டால் மட்டுமே பிளாஸ்டிக் பைகளை புழக்கத்தில் இருந்து அகற்ற முடியும். மேலும் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும்.

மாற்றான பொருட்களை கண்டறிந்து...

குளித்தலையில் பூ வியாபாரம் ெசய்யும் தட்சணாமூர்த்தி:-

பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பதை முழுவதுமாக தடை செய்ய வேண்டும். அதுபோல கள்ளச் சந்தைகளில் பிளாஸ்டிக் பைகள் விற்கப்படுவதையும் தடுத்து அவ்வாறு விற்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்கள் சர்வசாதாரணமாக பயன்படுத்தும் இந்த பிளாஸ்டிக் பைகளை ஒருபோதும் தடை செய்ய முடியாது. எந்த நாளும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் போக்கை கட்டுப்படுத்த முடியாது. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பொருட்களை கண்டறிந்து அவற்றை பொதுமக்கள் மத்தியில் பயன்பாட்டுக்கு அரசு முழுமையாக கொண்டு வந்தால் மட்டுமே பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய முடியும்.

தடைவிதிக்க ேவண்டும்

ெநாய்யல் அருேக மரவாபாளையம் பகுதியை சேர்ந்த இயற்கை ஆர்வலர் முருகேசன்:-

பிளாஸ்டிக் விற்பனை செய்வதற்கு, பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதேபோல் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீதும் தடை விதித்து உற்பத்தியை நிறுத்தினால் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த முடியும். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உற்பத்தி செய்து கொண்டு இருக்கும்போது அது விற்பனைக்கு தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும். விற்பனையும் நடந்து கொண்டுதான் இருக்கும். பொதுமக்களும் அதை பயன்படுத்த தான் செய்வார்கள்.

எனவே பிளாஸ்டிக் பை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தடை விதித்து பூட்டினால் மட்டுமே உற்பத்தி செய்யாமல் இருப்பார்கள். அவ்வாறு உற்பத்தி செய்யாமல் இருக்கும்போது பிளாஸ்டிக் பைகள் கப்புகள் விற்பனைக்கு வராது. முற்றிலுமாக தடைபடும். பொதுமக்களும் அதனை பயன்படுத்தாமல் இருப்பார்கள். எனவே சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் இருக்க பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தாமல், விற்பனை செய்யாமல் இருக்க தமிழக அரசு பிளாஸ்டிக் பைகள் தயார் செய்யும் நிறுவனங்களை தடை செய்து கண்காணிக்க வேண்டும்.

கடுமையான சட்டம் தேவை

தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர் விஜயகுமார்:-

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த, விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் தடை சட்டம் அமலில் இருந்த போதிலும் பிளாஸ்டிக் பைகள், கப்புகளின் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் நடமாட்டம் குறையவில்லை. இதன் காரணமாக சுற்றுப்புற சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. சுகாதாரத்துக்கு சவாலானதாக பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. கிராம ஊராட்சிகள் முதல் பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.

அதை தடுக்க முடிவதில்லை. காரணம் அரசாங்கம் சட்டம் இயற்றுவதும், உத்தரவு இடுவது மட்டுமே அவர்களது கடமை. சட்டத்தையும், உத்தரவையும் பேணிப் பாதுகாத்து நடைமுறைப்படுத்துதல் என்பது உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு. ஆனால் அந்த பொறுப்பை உணர்ந்து யாரும் செயல்படுவதில்லை. கடுமையான சட்டம் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேவையான சட்டத்தை கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பிளாஸ்டிக் பை , தடையை தொடர்ந்து நிரந்தரப்படுத்த முடியும். அவ்வப்போது பரிசோதனை செய்து வழக்குகள் பதிந்து அபராதம் விதிப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஓரளவுக்காவது குறைக்க இயலும்.

அபராதம் விதிக்கப்படுகிறது

கரூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா:-

தமிழக அரசின் உத்தரவின் பேரிலும், கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின் பேரிலும் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டும், பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது. மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் மனிதர் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எனவே பிளாஸ்டிக் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டுக்கு வர வேண்டும்.

உற்பத்தியை தடை செய்ய வேண்டும்

கரூர் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு செயலாளர் வெங்கட்ராமன்:-

பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வதை தடை செய்ய வேண்டும். உற்பத்தி செய்வதை தடுத்தாலே பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தில் இருக்காது. அதை விட்டுவிட்டு சிறு, சிறு கடைகளில் ஆய்வு செய்து அபராதம் விதிப்பது தேவையில்லாதது. உற்பத்தியை தடை செய்யும் போது வியாபாரிகள் பொருட்களை பார்சல் செய்வதற்கு மாற்றுவழிகளை செய்து கொள்வார்கள். பொதுமக்களும் பொருட்கள் வாங்குவதற்கு துணி பைகளை கொண்டு வரவேண்டும். அதற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டம் வருவதற்கு வணிகர் சங்க பேரமைப்பு உறுதுணையாக இருப்போம். அதில் எங்களுக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

இவ்வாறு அவா்கள் கூறினா்.


Next Story