அரசு ஆஸ்பத்திரிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முழுமையாக அமலில் உள்ளதா? - அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அரசு ஆஸ்பத்திரிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முழுமையாக அமலில் உள்ளதா? - அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

அரசு ஆஸ்பத்திரிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முழுமையாக அமலில் உள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் சரியான நேரத்திற்கு பணிக்கு வரவேண்டும் என்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு வந்ததால் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. பிற மாநிலங்களில் சுகாதாரத்துறையின் கீழ் பயோமெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறையை மீண்டும் முழுமையாக கட்டாயம் நடைமுறைப்படுத்த கோரி ஏற்கனவே தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை 4 மாதத்தில் அமல்படுத்த உத்தரவிட்டது. இதுவரை இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை.

இதில் தொடர்புடைய சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கடந்த 2019-ம் ஆண்டில் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வந்தது. முழுமையாக அமல்படுத்தப்படாததால், இதற்காக கூடுதலாக 6 மாதம் அவகாசம் கோரப்பட்டது. தற்போது பயோமெட்ரிக் முறை முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன? என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story