கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?
உண்மையில் கொரோனா ஒழிந்து விட்டதா? தைரியமாக நடமாடலாமா? பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்லலாமா? என்று பலதரப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர். அதற்கு மருத்துவர்களும் மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கியது.
இது ஒரு வகையான சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் என்பதால் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேற்றப்படும் சிறிய நீர்த்துளிகள் வழியாக அடுத்தவர்களுக்கு எளிதாக பரவி லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்தது.
பொதுமக்கள் அச்சம்
இந்தத் தொற்றால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினர்கூட அருகில் சென்று பார்க்க முடியாத அளவுக்கு பரிதாபநிலை ஏற்பட்டது. உலகில் உயிர்களை பறித்ததுடன், மனிதர்களை மட்டும் அல்லாது அரசாங்கங்களையும் கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாகப் புரட்டி போட்டது கொரோனா.
தடுப்பூசிகள் மூலம் அதன் பரவலை தடுத்துவிட்டாலும் தற்போது 4-வது அலை, 5-வது அலை வரப்போகிறது என்றெல்லாம் ஆங்காங்கே புரளிகள் புரண்டு வருவதால், பொதுமக்கள் கொஞ்சம் அச்சப்படத்தான் செய்கின்றனர்.
பயணங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போதுகூட கண்டிப்பு இல்லாவிட்டாலும் தற்காப்புக்காக ஒரு சிலர் முக கவசங்கள் அணிந்து செல்வதையும் காணமுடிகிறது. உண்மையில் கொரோனா ஒழிந்து விட்டதா? தைரியமாக நடமாடலாமா? பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்லலாமா? என்று பலதரப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர். அதற்கு மருத்துவர்களும் மற்றவர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
முககவசம் அவசியம்
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சுகந்தி ராஜகுமாரி:- கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மக்கள் தடுப்பூசி செலுத்தி இருக்கின்றனர். மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து வகைகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது திண்டுக்கல்லில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லை. அதேநேரம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிப்பது அவசியம். பொதுஇடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினியை கொண்டு சுத்தமாக கழுவுதல் ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா மட்டுமின்றி பிற நோய்களின் தொற்றில் இருந்தும் பாதுகாத்து கொள்ளலாம். காசநோய், ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு உள்பட பல நோய்களை தடுக்க முடியும். மேலும் முககவசம் அணிவதால் புகை, தூசு போன்றவற்றால் காற்று மாசடைவதால் சுவாச பிரச்சினைகளில் இருந்தும் எளிதில் தற்காத்து கொள்ளலாம். எனவே கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்று கருதி முககவசம் அணிவதை கைவிட்டுவிடக்கூடாது. அதேபோல கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவ வேண்டும்.
தடுப்பூசியே காரணம்
பழனியை சேர்ந்த டாக்டர் கார்த்தி:- கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் உயிரிழப்பு அதிகமாக இருந்ததால் மக்களும் தடுப்பூசி செலுத்தினர். பெரும்பாலான மக்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கின்றனர். அதேபோல் பூஸ்டர் டோசும் ஆர்வமாக செலுத்தினர். இதனால் கொரோனா தொற்று வெகுவாக குறைந்தது. திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு தடுப்பூசியே காரணம். அதேநேரம் நோய் முற்றிலும் போய்விடாது என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை சுத்தமாக கழுவுதல் ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். இதன்மூலம் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு முறைகளை மக்கள் கையாழ வேண்டும். அது கொரோனாவை மட்டுமின்றி பிற நோய்களையும் வரவிடாமல் தடுக்கும்.
மெத்தனம் கூடாது
திண்டுக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி:- கொரோனா காலத்தில் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை கூட ஏற்பட்டது. இதற்கிடையே கொரோனாவுக்கு கொத்துகொத்தாக மக்கள் பலியாகினர். இதனால் மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டது. அதன் காரணமாக கொரோனா தொற்று இல்லை என்றாகி விட்டது. அதேநேரம் கொரோனா ஏற்படுத்திய இழப்பை நாம் மறந்து விடக்கூடாது. கொரோனா போய்விட்டது என்று மெத்தனமாக சுற்றக்கூடாது. கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்பதால் நாம் அலட்சியமாக இருக்க கூடாது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
குழந்தைகளிடம் பழக்கம்
நத்தத்தை சேர்ந்த விவசாயி தேன்சேகர்:- ஏழைகள், வசதி படைத்தவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கொரோனா பந்தாடியது. கொரோனா காலத்தில் சாதாரண தொழிலாளர்கள் முதல் அனைத்து தரப்பினரும் வேலையின்றி பாதிக்கப்பட்டனர். விவசாய பொருட்களை கூட எளிதாக விற்க முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணம் நோய் பரவலை கண்டுகொள்ளாமல் மக்கள் சுற்றித்திரிந்ததே ஆகும். இதனால் பலர் உயிரிழந்ததை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள். அதுபோன்ற ஒரு நிலைமை இனிமேல் எந்த காலத்திலும் ஏற்படக்கூடாது. எனவே கொரோனா தொற்று இல்லை என்பதால் நோய் போய்விட்டது, இனிமேல் கவலை இல்லை என்று சுற்றித்திரியக்கூடாது. முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பல நோய்கள் வரலாம். எனவே கைகளை சுத்தமாக கழுவுதல், வெளியே செல்லும் போது முககவசம் அணிதல் ஆகிய பழக்கங்களை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
665 பேரின் உயிரை குடித்த கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகள், சிறப்பு மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் உள்பட மொத்தம் 665 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருக்கின்றனர்.