சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா?


சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறதா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

விருதுநகர்

பலருடைய செல்போன்களிலும் அடிக்கடி கேட்கும் உரையாடல் இதுதான். 'பேங்க் மேனேஜர் பேசுறேன் சார், உங்கள் ஏ.டி.எம். கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும், ஏன் இணைக்காமல் இருக்கிறீங்க?, ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும் சார். ஏ.டி.எம். கார்டை கையில் எடுங்கள். என்ன பேங்க் கார்டு வைக்கிறீங்க, ஸ்டேட் பேங்கா, இந்தியன் பேங்கா, கனரா பேங்கா?. என்பார்கள்.

சந்தேகமடைந்த நபர் நீங்கள் எந்த பேங்க் மேனேஜர் சார் பேசுறீங்க? ...ஸ்டேட் பேங்கில் இருந்து பேசுகிறேன், உங்கள் ஏ.டி.எம். கார்டை ரினிவல் பண்ணணும், கார்டு மேலே உள்ள 16 நம்பரை மெதுவா சொல்லுங்க சார்' என்பார்.

இணைய மோசடி

வடமாநிலங்களை சேர்ந்த சிலர் தமிழகத்தில் உள்ள செல்போன் எண்களில் இதுபோன்று பேசி பணத்தை திருடி விடுகின்றனர். இணையதளம் மூலம் மோசடி பேர் வழிகள் வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று, அவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். ஏதாவது ஆசை வார்த்தைகளை பேசி, செல்போனின் உள்ளே புகுந்துவிட்டால், அதை வைத்து வங்கிக்கணக்கின் உள்ளே போய் பணத்தை அள்ளிவிடுகிறார்கள்.

இதுபோன்று பல வடிவங்களில் சைபர் கிரைம் குற்றங்கள் கொரோனா காலத்தில் அதிகரித்து காணப்பட்டது. தற்போதும் இக்குற்றங்கள் நாடெங்கிலும் அதிகரித்தே காணப்படுகிறது. தமிழகம் இந்த குற்ற அளவுகளில் தற்போது 12-வது இடத்தில் உள்ளது.

கொரோனா பொது முடக்கக் காலமான 2020-ம் ஆண்டு நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 ஆயிரத்து 97 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கிரிப்டோ மோசடியும் தமிழகத்திலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. இப்படியாக இணையவழி மோசடிகள் ஏராளமாக நடக்கின்றன. மக்களும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

இதுபற்றி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதற்கு அவர்கள் கூறிய விவரம் வருமாறு:-

விழிப்புணர்வு

விருதுநகரை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் சீமான்:-

சைபர் கிரைம் பற்றி முன்பைவிட அதிக விழிப்புணர்வு மக்களிடையே இருக்கிறது. 13 நம்பர் சொல்லுங்க என்று செல்போனில் அரைகுறை தமிழில் பேசுபவரை நம்மவர்கள் கலாய்த்து விடுகின்றனர். அதே வேளையில் சில ஹைடெக் நபர்களிடம் மிகவும் எளிதில் ஏமாந்து விடுகின்றனர். நம்ப முடியாத விலையில் ஒரு பொருள் கிடைப்பதாக ஒரு லிங்க் இருக்கிறதா? யாரோ ஒரு பிரபலமான நபரை பற்றி உங்கள் ஆர்வத்தை தூண்டும் விதமாக ஒரு செய்தி பற்றிய லிங்க் இருக்கிறதா? இந்த ஆப்பை டவுன்லோட் செய்தால் உங்களுக்கு ஏதாவது இலவசம் கொடுக்கிறார்களா? அப்படியானால் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுங்கள். மீனுக்கு தூண்டில் போடுவது போல் உங்களுக்கு தூண்டில் போடுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் பிஷ்ஷிங் என்பர். தூண்டிலில் மாட்டினால் உங்கள் தகவல்கள் அனைத்தும் அவர்களுக்கு சென்று விடும்.

இதனால் பல மோசமான பின் விளைவுகள் ஏற்படலாம். இணையதளம் பற்றிய உங்கள் விழிப்புணர்வை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

கால தாமதம்

ராஜபாளையத்தை சேர்ந்த முதுகலை கணினி அறிவியல் துறை மாணவி முத்துச்செல்வி:-

சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் தொழில்நுட்பத்தில் இன்னும் பல கட்ட வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபடுவோர் எப்படி கண்டறிய முடியாத நிலையை கருத்தில் கொண்டு குற்றங்கள் செய்து வருகின்றனர்.

சைபர் கிரைம் குற்றங்கள் பெருக பெருக அதற்குண்டான மென்பொருளை மாற்றியமைத்துக் கொண்டு அப்டேட் செய்து கொண்டே வர வேண்டியுள்ளது. அதோடு குற்றங்களில் ஈடுபடுவோர் ஐ.பி.எண்ணை அடிக்கடி மாற்றியமைத்து அடுத்த குற்றங்களை செய்யும் பொழுது, நாம் முதல் கட்டத்தில் நின்று கொண்டு விசாரணை செய்வது கால தாமதத்தை உருவாக்குகிறது.

பணத்தை இழந்தார்

விருதுநகரை சேர்ந்த ஆராய்ச்சி மாணவி சரண்யா:-

சைபர் கிரைம் குற்றங்களை தவிர்ப்பது என்பது தடுப்பு நடவடிக்கைகளால் முடியாது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு இருந்தால் தான் அதை முற்றிலுமாக தடுக்க முடியும். எனது சினேகிதி ஒருவர் செயலி மூலம் ஒரு பெண் தொடர்பு கொண்ட போது அவர் தாங்கள் கொள்முதல் செய்த பொருட்களுக்காக உங்களுக்கு ஒரு இலவச மோட்டார் சைக்கிள் உள்ளது.

அதை பெற்றுக்கொள்ள ஒரு தொகையை அனுப்ப வேண்டும் என்று கேட்டபோது இவர் நான் பெண்ணாக இருப்பதால் மோட்டர் சைக்கிள் தேவை இல்லை என்று ஒரு பொருளை சொன்னபோது முதலில் பணத்தை அனுப்புங்கள் என்று சொன்னவுடன் இவர் ரூ.70 ஆயிரம் வரை அனுப்பி விட்டார். அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்த நிலையில் அவர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். ஆனாலும் பணத்தை மீட்க முடியவில்லை. எனவே போலீஸ் துறையில் நடவடிக்கை எடுத்து வந்தாலும் பொதுமக்கள் விழிப்புடன் நடந்து கொண்டால் தான் இம்மாதிரியான சைபர் குற்றங்கள் முற்றிலுமாக தவிர்க்க முடியும்.

குற்றங்கள் குறைந்து வருகிறது

தாயில்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவன் அருண்:-

போட்டிகள் நிறைந்த இந்த காலத்தில் அரசு வேலை கிடைப்பது அரிதாக உள்ளது. தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு குறைந்துள்ளதால் வேலை தேடுவதற்கு நேரம் சரியாக இருக்கிறது.

பொழுதுபோக்குக்கு போதுமான நேரமில்லை. இந்த நேரத்தில் குற்றங்கள் புரிவதற்கு யாரும் தயாராக இல்லை. அதனால் தற்போது குற்றங்கள் முன்பை விட குறைந்து வருகிறது.

நூதன முறையில் திருட்டு

திருச்சுழியை சேர்ந்த வக்கீல் இளையராஜா:-

தமிழ்நாட்டில் செல்போன்கள் மூலம் அழைக்கப்பட்டு நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களுடைய வங்கி கணக்கு எண், ஆதார் எண் போன்ற விவரங்களை சேகரித்து அதன் மூலம் ஒவ்வொருவரின் வங்கியில் உள்ள பணத்தை நூதனமுறையில் திருடி வருகின்றனர்.

மேலும் பல்வேறு நூதன முறைகளில் மோசடி நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக அரசு சைபர் கிரைம் என்று மாவட்ட அளவில் போலீஸ் நிலையங்கள் அமைத்து குற்றங்களை தடுத்து வந்த போதிலும் இன்னும் குற்றங்கள் வெகுவாக குறைந்தபாடில்லை. தொடர்ந்து குற்றங்கள் நடந்து வருகிறது. ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற குற்றங்கள் விரைவில் குறையும்.

தேவையற்ற விவாதங்கள்

ராஜபாளையத்தை சேர்ந்த போட்டி தேர்வு மாணவன் முத்து செல்வம்:-

சைபர் கிரைம் குற்றங்கள் இன்று அதிக அளவில் நடந்து வந்தாலும் அவற்றை கண்டுபிடிப்பதற்கான தொழில் நுட்பங்களும் வளர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. செல்போன் மூலம் விளம்பரங்களை நாம் பார்க்கும் பொழுது நம்முடைய தகவல்கள் ரகசியமாக திருடப்படுகின்றன.

செல்போன் மூலம் பல தகவல் பரிமாற்றங்கள் நடைபெறும் போது தேவையற்ற விவாதங்கள், வார்த்தைகள், படங்கள், பரிமாறப்படும் போது வரம்புக்கு மீறிய செயல்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதோடு சைபர் குற்றங்கள் நடைபெறும் போது நாம் தைரியமாக அதற்குரிய அதிகாரிகளிடம் விளக்கங்களுடன் புகார் அளிக்க முன்வர வேண்டும்.

இணைய தளம்

ஆசிரியர் காளியப்பன்:-

இணைய தளம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் கூட செல்போனில் புகுந்து விளையாடுகின்றனர். இதனால் தேவையற்ற விளைவுகளை அவர்கள் அனுபவிக்க நேரிடுகிறது. பாதுகாப்பான இணைய தள முகவரிகளை பயன்படுத்தும் போது எந்த பிரச்சினைகளும் வருவதில்லை.

சைபர் கிரைம் குற்றங்கள் நமது கவன குறைவால் தான் ஏற்படுகிறது. ஆதலால் போதிய விழிப்புணர்வுடன் இருந்தால் குற்றங்களை தடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


பொதுமக்கள் நினைத்தால் குற்றங்களை தடுக்கலாம்

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மணிவண்ணன்

கடந்த காலங்களில் அருகே உள்ள ஊர்களில் இருந்தோ, மாவட்டங்களில் இருந்தோ திருடர்கள் வந்து பொருட்களை திருடி செல்வது வழக்கம். ஆனால் தற்போதைய நிலையில் கணினி பயன்பாட்டிற்கு வந்த பின்பு உலகளாவிய அளவில் முகம் தெரியாத நபர்கள் நிமிட நேரத்தில் பணத்தை கவர்ந்து விடும நிலை அதிகரித்து வருகிறது.

இதற்குக்காரணம் பொதுமக்கள் தொடர்பில் வருபவர்கள் யார் என்று அறிமுகம் இல்லாமல் முகம் தெரியாமலேயே அவர்களது ஆசை வார்த்தைகளை நம்பி பணத்தை இழந்து விடுகின்றனர். தற்போது மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டால் தான் இந்த குற்றங்களை தடுக்க முடியும். இதற்காக மாவட்ட போலீஸ் நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் சைபர் குற்றங்கள் அதிகரித்துத்தான் வருகிறது. தமிழக அரசு போலீஸ் துறைக்கு இதற்காக நவீன குற்ற கண்டுபிடிப்பு சாதனங்களை வழங்கி உள்ளது. ஆனாலும் பொதுமக்களின் விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றே இக்குற்றங்களை முற்றிலுமாக தடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார்.


Next Story