இறந்தவர் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதில் இருதரப்பினர் தகராறு: மனித உரிமை கமிஷன் தீர்ப்பின்படி அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா? -மதுரை ஐகோர்ட்டு கேள்வி
இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மனித உரிமை கமிஷன் பிறப்பித்த தீர்ப்பின்படி துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என அரசு தரப்பில் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு செல்வதில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது மனித உரிமை கமிஷன் பிறப்பித்த தீர்ப்பின்படி துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என அரசு தரப்பில் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாற்றுப்பாதையில் ஊர்வலம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மேலாயூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவன். எனது மனைவி நாகலெட்சுமி உடல் நலக்குறைவால் கடந்த 2020-ம் ஆண்டில் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்துச்சென்றோம். அப்போது மழைக்காலம் என்பதால் வழக்கமான பாதை (கால்வாய்குள்ளே இறங்கிச்செல்லும் வழி) தண்ணீர் நிரம்பி சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் மாற்றுப்பாதையில் உடலை கொண்டு சென்றோம். அப்போது அங்கிருந்த மற்ற சமுதாயத்தை சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தினர். இதுசம்பந்தமான புகாரின்பேரில் இருதரப்பினரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை. இதனால் மழை பெய்து கொண்டு இருந்தபோதும், அந்த இடத்திலேயே பல மணி நேரமாக எனது மனைவியின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
இந்த சம்பவம் குறித்த செய்திகள் வெளியானது. அதன் அடிப்படையில் மாநில மனித உரிமை கமிஷன், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது.
முடிவில், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கையையும், குற்றவியல் நடவடிக்கையையும் எடுக்க பரிந்துரைத்தது. மேலும் எனது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. எனவே மனித உரிமை கமிஷன் பிறப்பித்த உத்தரவின்படி ரூ.5 லட்சத்தை எனக்கு இழப்பீடாக வழங்கவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதிகள் கேள்வி
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் பினேகாஸ் ஆஜராகி, இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் இதுபோன்ற பிரச்சினைகளை கையாள்வதற்கு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என மனித உரிமை கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதை டி.ஜி.பி. அலுவலகம் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றார்.
அப்போது நீதிபதிகள், மனித உரிமை கமிஷன் பிறப்பித்த உத்தரவை இதுவரை நிறைவேற்றாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.